வாக்காளர்கள் செல்போன் நம்பர் கொடுத்தது யாருங்க… ஓட்டு கேட்டு நச்சரிப்பு…!
கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பிரச்சார பணிகள் தீவிரமாக நடக்கிறது.
கட்சி, வேட்பாளர்கள் தொடர்பாக ஆன்லைனில் விதிமுறை மீறல் விவகாரங்களை கண்காணிக்க தேர்தல் கமிஷன் ‘மீடியா மானிட்டர்’ பிரிவை துவக்கி கண்காணிக்கிறது. ஓட்டு கேட்டு குவியும் பதிவுகள், செல்போன் எஸ்.எம்.எஸ் போன்றவற்றையும், விதிமுறை மீறல்களையும் கண்காணிக்கும் மீடியா பிரிவினர்.
‘பேஸ்புக்’ இன்ஸ்டா, யூ யூடியூப் பதிவுகளில் அரசியல் விமர்சனங்களும் அதிகமாகி வருகிறது. தினமும் எங்கள் கட்சிக்கு ஓட்டு போடுங்க என பல்வேறு கட்சியினர் குரல் பதிவு தொலைபேசி அழைப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
தினமும் தொடர்ந்து போன் அழைப்பு வருவதால் வாக்காளர்கள் தவிப்படைந்துள்ளனர். சோசியல் மீடியாக்களிலும், வாட்ஸ் அப் எண்ணிலும் ஓட்டு கேட்டு மெசேஜ் வருகிறது. எப்படித்தான் நம்ம நெம்பர் கண்டு புடுச்சு அனுப்பறாங்க, யார் தந்தது என கண்டறிய முடியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
சிலர், கருத்து கேட்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்பதாக தேர்தல் பிரிவிற்கு புகார் சென்றுள்ளது. யார் ஆட்சி வந்தா நல்லது, நீங்க ஆதரவு யாருக்கு, எந்த தலைவர் சிறப்பாக செயல்படறார், ஏன் நீங்க இந்த கட்சிக்கு ஒட்டு போடறதா சொல்றீங்க என கருத்து கேட்பில் கேள்விகள் கேட்கப்படுவதாக தெரியவந்தது.
கோவை மாவட்டத்தில் எஸ்ஐஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் நடந்தது. இதில் வாக்காளர்கள் தங்களது விவரங்களையும், வாட்ஸ் அப் எண்களையும் எழுதி கொடுத்தனர். இந்த செல்போன் எண்களுக்கு தான் தொலைபேசி அழைப்பு, மெசேஜ் வருவதாக வாக்காளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பிஎல்ஓக்கள் மூலமாகவோ, தேர்தல் பிரிவின் மூலமாகவோ வார்டு வீதி வாரியாக வாக்காளர்களின் செல்போன் எண் விவரங்கள் பெறப்பட்டுள்ளது. அந்தந்த தொகுதி வாக்காளர்களுக்கு முறையாக ஒட்டு கேட்டு எப்படி கட்சியினர் பேசுகிறார்கள் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக தேர்தல் பிரிவினர் கூறுகையில், ” எஸ்ஐஆர் பணியின் போது அரசியல் கட்சியினரும் முகாம்களில் கலந்து கொண்டார்கள். அவர்கள் வாக்காளர்களுக்கு உதவி செய்யும் போது செல்போன் எண் விவரங்களை வாங்கியிருக்கலாம்.
மேலும் ஒட்டு கேட்டு செல்போனில் பேசக்கூடாது என யாரும் சொல்லவில்லை. குரல் பதிவு அழைப்பு எவ்வளவு வந்துள்ளது என மீடியா மானிட்டர் பிரிவு மூலமாக விசாரணை நடக்கிறது. கட்டணம் செலுத்தி இப்படி அழைப்பு பதிவு செய்து அனுப்புகிறார்களா என விசாரிக்கிறோம், ” என்றனர்.
