கோவை மாவட்டத்தில் 90 தேர்தல் கண்காணிப்பு படை..!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணி தீவிரமடைந்து வருகிறது. மாவட்ட அளவில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 18000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில் கோவை மாவட்ட அளவில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்
கண்காணிப்பு படைகள் தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதி இருக்கிறது .‌ இதில் 90 கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட உள்ளது.
இதில் SST என்ற நிலையான கண்காணிப்பு படை குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கண்காணிப்பு பணி நடத்தும்.

VST என்ற வீடியோ கண்காணிப்பு படை பல இடங்களை கண்காணித்து வீடியோ பதிவு செய்து பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் உள்ளதா என வீடியோ பதிவுடன் ஆதாரங்களை சேகரிக்கும்.

FST என்ற பறக்கும் படை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பல இடங்களில் தொடர்ந்து சுற்றி சுற்றி சோதனை நடத்தும்.
மூன்று விதமான கண்காணிப்பு படைகள் கோவை மாவட்டம் முழுவதும் கண்காணிக்க உள்ளது

இதில் வருவாய்த் துறையினர், போலீசார், வணிகவரி உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் பணியாற்ற உள்ளனர்.

ஒவ்வொரு குழுவிலும் நான்கு பேர் பணியில் இருப்பார்கள். 24 மணி நேரமும் சோதனை செய்யும் வகையில் இந்த சிறப்புப் படைகள் செயல்படும். இந்த சிறப்பு படைக்கான வாகனங்களை ஆன்லைன் மூலமாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். வாகனங்களில் இயக்கம் ஜிபிஎஸ் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்படும்.

மாவட்ட அளவில் இந்த சிறப்பு படைகளுக்கான வாகனங்களை தயார் செய்யும் பணிகள் நடக்கிறது. அரசுத் துறையில் உள்ள வாகனங்கள் மற்றும் தனியார் வாடகை வாகனங்கள் வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் வாகனங்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தேர்தல் கமிஷன் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

விதிமுறை மீறல் போன்றவற்றில் சிக்காத நேர்மையான அலுவலர்கள் இந்த பறக்கும் படையில் பணியாற்ற உள்ளனர். தேர்தல் கமிஷன் தேர்தல் தேதி அறிவித்தவுடன் உடனடியாக இந்த பறக்குப் படையின் செயல்பாடு அமலுக்கு வந்துவிடும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *