ஊதியத்திற்கு போராடிய சத்துணவு ஊழியர்கள் உணவுக்கு வாடிய மாணவர்கள்..!
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கோவை மாவட்ட கிளை சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று துவங்கியது.
இதில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஐந்து ஆண்டு பணி முடித்த சமையல் உதவியாளர்களுக்கு உடனடியாக சமையலராக பதவி உயர்வு தர வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ஒன்பதாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் . காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். கேஸ் சிலிண்டரை நேரடியாக மையங்களுக்கு தர வேண்டும் .
காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தடையை மீறி ஸ்டேட் பேங்க் ரோட்டில் சத்துணவு ஊழியர்கள் மறியல் செய்தனர். இவர்களை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். சத்துணவு ஊழியர்கள் மறியல் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
இதில் சத்துணவு ஊழியர் சங்கத்தில் மாவட்டத் தலைவர் பானு லதா மாவட்ட செயலாளர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் பள்ளிகளில் 900 மேற்பட்ட சத்துணவு மையங்கள் இருக்கிறது. சத்துணவு ஊழியர்கள் வேலை புறக்கணித்து போராட்டம் நடத்தியதால் சமையல் பணி எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் அந்தந்த ஒன்றியங்களில் காலை சத்துணவு தயாரிக்கும் ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக பள்ளிகளுக்கு தேவையான சத்துணவு சமைக்கும் பணி நடந்தது. இதில் சில பள்ளிகளுக்கு போதுமான சத்துணவு வழங்கப்படவில்லை என தெரிகிறது. ஊழியர்கள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வந்தால் மாணவர்களின் உணவு பிரச்சனை தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
