மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை சாதிய விவகாரம்; கோவை கலெக்டருக்கு நோட்டீஸ்..!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை 1 பிரிவில் சசிராஜ் (42) என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இதே கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் பிரகாஷ் குமார் (44) பணியாற்றினார். இவர் தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்தவர். அலுவலகத்தில் சசிராஜின் ஒழுங்கீன நடவடிக்கைக்காக பிரகாஷ் குமார் அவருக்கு மெமோ கொடுத்துள்ளார். இந்நிலையில், பிரகாஷ் குமார் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் கோவை உக்கடம் அரசு பஸ் போக்குவரத்து கழக அலுவலக கிளை மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதன் பின்னணியில் சசி ராஜ் இருப்பது தெரியவந்தது. அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கிளை மேலாளர் பிரகாஷ் குமாரை பழிவாங்கும் நோக்கத்தில் இடமாற்ற உத்தரவு வாங்கி கொடுத்திருப்பதாக தகவல் வெளியானது.

மேலும் பிரகாஷ் குமார் பயன்படுத்திய மேட்டுப்பாளையம் போக்குவரத்து கழக அலுவலக அறையை மாட்டு சாணி மூலமாக சுத்தம் செய்ய டிரைவர் சசிராஜ் உத்தரவிட்டதாக தெரிய வந்தது. சசிராஜின் இந்த சாதிய ரீதியிலான நடவடிக்கைக்கு சக ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சசிராஜ் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க துவங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், போக்குவரத்து துறை செயலர் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோருக்கும் இன்று நோட்டீஸ் வழங்கப்பட்டது .

5 நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கிளை மேலாளர் பிரகாஷ் குமார் மீண்டும் மேட்டுப்பாளையத்தில் பணியாற்ற உத்தரவு வழங்க வேண்டும். உக்கடத்தில் பணியிட மாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என இன்று அறிவித்துள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பஸ் விவகாரத்தில் ஏற்கனவே சாதி ரீதியான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில் மீண்டும் போக்குவரத்துக் கழக அதிகாரி மீது சாதி ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் பல்வேறு தாழ்த்தப்பட்டவர் அமைப்பினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *