கோவையில் 1.06 கோடி ரூபாய் கொள்ளை… காரில் தப்பிய 5 பேர் கைது

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் தாமுன் (65). இவர் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். தாமுன் இன்று காலை ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ்சில் வந்துள்ளார்.

பஸ் கோவை லட்சுமி மில்ஸ் சிக்னல் பகுதிக்கு வந்ததும் தாமுன் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அங்கே காத்திருந்த கும்பல், சில நொடிகளில் அவரது கையில் வைத்திருந்த பையை பறித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் கூடினர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் காரில் ஏறி தப்பியது.

தாமுன் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரில், தன்னிடம் இருந்த பையை சிலர் பறித்து சென்றதாகவும், அதில் ரொக்கமாக ரூ.1.06 கோடி வைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கோவையில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக தப்பிச்செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அனைத்து மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் டோல்கேட் பகுதியில் காரில் வந்த 5 வடமாநில வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 5 பேரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தொழில் அதிபர் தாமுனிடம் பணத்தை கொள்ளையடித்தவர்கள் என்பது தெரியவந்தது. ஆனால் அவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எதுவும் கைப்பற்றப்பட வில்லை.

இதனால் போலீசார் அந்த பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உளுந்தூர்பேட்டை போளீசார் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர். அவர்கள், பிடிப்பட்ட 4 பேரை கோவை அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளனர். முழு விசாரணைக்கு பின்னரே அவர்கள் யார் எதற்காக பணத்தை பறித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே தொழில் போட்டியால் பணம் பறிக்கப்பட்டதா போன்ற தகவல்கள் தெரியவரும்.

இதற்கிடையே ரேஸ்கோர்ஸ் போலீசார் இந்த கொள்ளை வழக்கில் கோவையில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாமுன் எதற்காக ரூ. 1 கோடியை கோவைக்கு எடுத்து வந்தார். அது ஹவாலா பணமா எதற்காக பஸ்சில் வந்தார் என பல்வேறு கோணங்களில் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

பணத்தின் மொத்த எடை சுமார் 24 கிலோ இருக்கும் என தெரிகிறது. இதை அவர் ஒரே பேக்கில் எப்படி போய்க்கொண்டு வந்தார் என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கோவைக்கு அவர் ஏன் வந்தார் இந்த பணம் யாரிடம் ஒப்படைக்க போகிறார் என்பது தொடர்பாகவும் போலீசாருக்கு சந்தேகம் நிலவுகிறது. இதன் பின்னணி தொடர்பாக விசாரணை நடக்கிறது. ரூ. 1 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *