தேர்தல் விதிகளை மீறினால் 6 மாதம் சிறை: திருமண மண்டபம், அச்சகங்களுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக திருமண மண்டபம் மற்றும் அச்சக உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.

இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், கலால் துறை துணை கமிஷனர் முருகேசன் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அச்சகங்கள் முறையான அனுமதி பெற்று ஆட்சேபம் விமர்சனம் அல்லாத வாசகங்களை பிரிண்டிங் செய்ய வேண்டும்.

முன்னதாக அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான நோட்டீஸ், பேனர் தொடர்பான வாசகங்களை அச்சிடும் முன்னர் அந்த விவரங்களை காட்டி அனுமதி பெற வேண்டும். சர்ச்சை மற்றும் விமர்சனம் செய்யும் வகையில் அச்சகங்கள் நோட்டீஸ் ஏதாவது அச்சிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நோட்டீஸ், பேனரில் அச்சகத்தின் பெயர், முகவரி இடம் பெற வேண்டும். தேர்தல் அதிகாரி முன் அனுமதி இன்றி நோட்டீஸ், பேனர், போஸ்டர் அச்சிடப்பட்டிருந்தால் நடத்தை விதிகளின் படி வழக்கு பதிவு செய்யப்படும். இதற்கு 6 மாத சிறை தண்டனை 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

திருமண மண்டபங்கள், பார்ட்டி ஹால் போன்றவற்றிற்கு முறையான அனுமதி பெற்ற பின்னரே அரசியல் கட்சி கூட்டம், ஆலோசனை போன்றவை நடத்த வேண்டும். அந்தக் கூட்டங்களில் மதுபானம் பயன்படுத்த அனுமதிக்க கூடாது.

திருமணம் மற்றும் இதர விசேஷங்கள் தொடர்பாக மண்டபங்களை வாடகைக்கு அனுமதித்தாலும் அது தொடர்பான தகவல்களை தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். தேர்தல் நாட்களில் விதிமுறை மீறி வெளியூர் வெளிமாநில நபர்களை மண்டபங்களில் தங்க வைக்க கூடாது.

தேர்தல் நடத்தை விதிகள் படி மண்டபங்களை நடத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் இருக்க வேண்டும். விதிகளை மீறக்கூடாது. பணம், பரிசு பொருட்களை மண்டபங்களில் பதுக்கி வைக்க கூடாது. தேர்தல் நடத்தை விதிகள் மீறும் மண்டங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என இந்த கூட்டத்தில் உத்தரவு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *