கோவை கேரள எல்லை செக் போஸ்டில் 35 தேர்தல் கண்காணிப்பு கேமரா…!
கோவை கேரள மாநில எல்லையில் வாளையாறு வேலாந்தாவளம், மீனாட்சிபுரம். கோவிந்தாபுரம், கோபநாரி உள்பட 13 சோதனைச்சாவடிகள் இருக்கிறது. தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கேரளம் மாநிலம் வழியாக கோவைக்குள் பரிசுப்பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கவும், வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கவும் சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு கண்காணிப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே போலீஸ், ஆர்டிஓ, கனிம வளத்துறை சார்பில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரிவின் சார்பில் புதிதாக நவீன ரக கேமராக்கள் அமைக்கப்படவுள்ளது. இந்த கேமராக்கள் அனைத்தும் 360 டிகிரி சுழன்று பதிவு செய்யும் வசதி கொண்டது. சோலார் மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் இந்த கேமரா வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் சிம்கார்டு பொருத்தப்பட்டு அதனை செல்போனில் பதிவு செய்து கண்காணிக்கலாம். விவரங்களை பல்வேறு பகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க முடியும். கேமரா பதிவுகளை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கேமராவில் வாக்குப்பதிவு முடியும் வரையிலான நாட்களில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைக்கும் வசதி உள்ளது. பல்வேறு அரசு துறைகளின் சார்பில் வைக்கப்பட்ட கேமராக்களில் முறையாக காட்சிகள் பதிவாகாமல் இருப்பதாக தெரிகிறது. எனவே அவுட்சோர்ஸ் முறையில் தேர்தல் கமிஷன் அதிரடியாக கண்காணிப்பு கேமராக்களை பெற்று 35 இடங்களில் அமைக்க ஏற்பாடு செய்துள்ளது.
