மாலை, மண்டபம், வாகன வாடகை எவ்ளோ…! தேர்தல் பிரிவினர் தொடர்ந்து தாமதம்

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

இந்த நிலையில் அனைத்து வகையான செலவுகளிலும் அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் செலவு கணக்கு ஒப்படைக்கும் வகையில் பல்வேறு வகையான விலைப்பட்டியல் தயார் செய்ய உத்தரவு வழங்கப்பட்டது .

இதில் உணவு பட்டியல் மட்டும் உத்தேசமாக தயார் செய்யப்பட்டிருக்கிறது . அதிலும் சில வகை உணவுகள் சேர்க்கப்படவில்லை.

மாவட்ட அளவில் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தும் கார் ,ஆட்டோ, வேன், பஸ் போன்றவற்றுக்கான வாடகை விவரங்கள் இன்னும் தேர்தல் பிரிவால் உறுதி செய்யப்படவில்லை.

அதேபோல் மைக் செட், ஒலி ஒளி அமைப்புக்கான கட்டணம் ,மேடை தயாரிப்பு கட்டணம், நாற்காலி , டேபிள் சாமியானா பந்தல், தகர சீட்டு கொட்டகை மற்றும் பல்வேறு வகையான தளவாட பொருட்களுக்கான வாடகை விவரங்கள் பொதுப்பணித் துறை மூலமாக தேர்தல் பிரிவினர் பெறவில்லை.

பேனர், போஸ்டர் போன்றவை வைக்கப்பட்டிருந்தால் அதற்கான கட்டண விவரங்கள் முறையாக அறிவிக்கப்படவில்லை. எவ்வளவு சதுர அடி பரப்பில் போஸ்டர் , பேனர் கட்டவுட் போன்றவற்றிற்கு விலை நிர்ணயம் செய்வது என யாருக்கும் தெரியாத நிலைமை இருக்கிறது.

மலர் மாலை , சந்தன மாலை , பூச்செண்டு, பொன்னாடை மற்றும் வரவேற்பு பொருட்கள் போன்றவற்றுக்கான விலைப்பட்டியிலும் தயார் செய்யப்படவில்லை.

லாட்ஜ் ,ஹோட்டல், தங்கும் விடுதி , சர்வீஸ் அபார்ட்மெண்ட் போன்றவற்றிற்கான கட்டண விபரங்களும் தரப்படவில்லை. திருமண மண்டபம் , பார்ட்டி ஹால், ஜெனரேட்டர் போன்றவற்றின் கட்டண விபரங்களும் அறிவிக்கப்படவில்லை.

இதை தொடர்பாக தேர்தல் பிரிவினரிடம் கேட்டபோது இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரப் பணி நடக்கவில்லை. அதற்குள் நாங்கள் இந்த கட்டண விவரங்களை உறுதி செய்து விடுவோம். உணவு பட்டியலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *