சமுதாய வானொலி குறித்து இரு நாள் கருத்தரங்கம்
இந்தியாவில் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், பொறியியல், தொழில் மற்றும் பல்வேறு சேவைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க சமுதாய வானொலி (கம்யூனிட்டி ரேடியோ) நீண்ட காலமாக நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறது.
மத்திய அரசின் மானிய உதவியுடன் பல்வேறு சேவை திட்டங்களை கம்யூனிட்டி ரேடியோ மூலமாக நிறுவனங்கள் நடத்துவோர் செய்ய முடியும். செயற்கை நுண்ணறிவு மூலமாக கம்யூனிட்டி ரேடியோ அடுத்த கட்ட மேம்பாட்டை எட்டி உள்ளது.
இதன் வளர்ச்சி எதிர்காலம் செயல்திட்டம் தொடர்பாக நீலகிரி மாவட்டத்தில் விநாயகா இன் பாப்பீஸ் ஹோட்டலில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது.
சமுதாய வானொலியின் வளர்ச்சி, அதன் சமூகப் பங்களிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் , வானொலி ஒலிபரப்பில் ஏற்படுத்தும் புதிய மாற்றங்கள் குறித்து தொழில்நுட்ப குழுவினர் முக்கிய கருத்துகளை தெரிவித்தனர்.
சமுதாய வானொலி நிலையங்களைத் தொடங்க விரும்பும் நிறுவனங்கள், சமூக அமைப்புகள், அரசு அல்லாத அமைப்புகள் (NGO), கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊடக ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கருத்தரங்கில் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியர் முனைவர் ஜெய்சக்திவேல் எழுதிய “சமுதாய வானொலிக் கையேடு” என்ற நூல் வெளியிடப்பட்டது.
கருத்தரங்கின் அமைப்பாளர் விஜயகுமார் , மத்திய அரசு சமுதாய வானொலி அமைப்பதற்காக ரூ.12.5 லட்சம் வரை மானியம் வழங்கி வருவதாகவும், அந்த மானியத்தை எவ்வாறு பெறுவது, வானொலி நிலையத்தை எளிதாக எவ்வாறு தொடங்குவது போன்ற நடைமுறை வழிகாட்டுதல்கள் இந்த கருத்தரங்கில் தெரிவித்தார்.
தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சமுதாய வானொலி நிலையங்களைத் தொடங்குவதற்கான தேவையான வழிகாட்டுதல்களும் இதில் பகிரப்பட்டது.
மேலும், கருத்தரங்கில் சமுதாய வானொலி உரிமம் பெறும் நடைமுறைகள், தொழில்நுட்ப அமைப்புகள், நிர்வாக செயல்முறைகள் மற்றும் நிதி மேலாண்மை குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளடக்கத் தயாரிப்பை மேம்படுத்துவது, 24 மணி நேர தானியங்கி ஒலிபரப்பு அமைப்பை உருவாக்குவது போன்ற புதிய வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில் ரத்தினம் கல்லூரி (ரத்தினவாணி எஃப்.எம்) மற்றும் கலசலிங்கம் பல்கலைக்கழகம் (கலசலிங்கம் எஃப்.எம்) ஆகிய சமுதாய வானொலி நிலையங்களின் பொறுப்பாளர்கள்
தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்தனர். மேலும், ஏர்மீடியா நிறுவனம் வழங்கி வரும் தொழில்நுட்ப ஆதரவு குறித்து விளக்கினர். ராமகிருஷ்ணா கல்லூரியின் முனைவர் பிரவீன்குமார் மற்றும் சென்னை டி.ஜி.வைணவக் கல்லூரி இதழியல் துறை பேராசிரியர் முனைவர் பிரகதி உள்ளிட்டோர் கருத்துகளை பகிர்ந்தனர்.
