கோவையில் ஓட்டுக்கு பணம், பரிசு கூப்பன் தொடர்பாக 47 புகார் பதிவு…

கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள், முறைகேடு புகார்கள் பெற கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையில் கோவை மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர் இன்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பணம், பரிசு பொருட்கள் தொடர்பான நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தனர்.

கோவை உக்கடம், செல்வபுரம், புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டுக்காக பரிசாக பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்து பரிசு கூப்பன் வினியோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் தரப்பிலிருந்து 47 புகார்கள் பெறப்பட்டது.

கடந்த 3 நாட்களாக பரிசு கூப்பன் புகார் அதிகரித்து வருகிறது. வீடு வீடாக பரிசு கூப்பன்களை போட்டு சென்றுள்ளார்கள். இதில் 2 முதல் 3 பரிசுகள் வரும் என வாக்காளர்கள் எதிர்பார்த்துள்ளனர். என்ன பரிசு என்பது ரகசியமாக இருக்கிறது. பரிசு கூப்பன் போட்ட நபர்களை பிடிக்க வேண்டும்.

நிறைய வீடுகளில் இந்த பரிசு கூப்பன் போட்ட நபர்களின் முகம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது என தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரிக்க கண்காணிப்பு படையினருக்கு உத்தரவு வழங்கப்பட்டது. பரிசு கூப்பன் கும்பல் எங்கே என தேர்தல் பார்வையாளர் கேட்ட போது, போலீசார் தேடுகிறார்கள்,

விரைவில் பிடிபடுவார்கள் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர் மாநகரில் போலீசார் பரிசு கூப்பன், பணம் தரும் கட்சியினர் தொடர்பாக தேர்தல் பிரிவினர் தகவல் தெரிவித்தால் சம்பவ இடத்திற்கு சென்று விசாரிப்பதில்லை. குற்றவாளிகளை பிடிப்பதில்லை,

போலீசார் செய்ய வேண்டிய வேலைகளை தேர்தல் பிரிவு செய்ய முடியாது. நாங்கள் பணம், பரிசு தரும் நபர்களை பிடிக்க வாய்ப்பில்லை. போலீசார் தேடி சென்று பிடிப்பதில்லை என தேர்தல் பிரிவினர் அதிரடியாக தெரிவித்தனர்.

தேர்தல் புகார்களை அலட்சியம் செய்யும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் பறக்கும் படையினர் சிலர் ஆதங்கத்துடன் புகார் கூறியுள்ளனர். கோவை மாவட்டத்தில் இதுவரை பணம், பரிசு பொருட்கள் கூப்பன் தொடர்பாக 253 புகார்கள் பெறப்பட்டிருக்கிறது.

ஆனால் இதில் தவறு செய்த நபர்கள் என யாரும் கைது செய்யப்படவில்லை, வழக்கு பதிவு செய்யவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *