கோவையில் சுடுகாட்டு மண் சட்டியுடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்…
கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது.
மாவட்ட அளவில் 10 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் துவங்கியிருக்கிறது.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் இதுவரை 24 பேர் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாமினேஷன் படிவம் 2 பி வாங்கி சென்றிருக்கிறார்கள்.
இதில் காங்கிரஸ் சார்பில் கோவை செல்வன், ஆம் ஆத்மி பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் படிவம் வாங்கி சென்றிருக்கிறார்கள்
சசிகலா கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் கே ஏ ஆதிநாராயணன் நாமினேஷன் படிவம் வாங்கி சென்று இருக்கிறார். ஆனால் இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் யாராவது மனுத்தாக்கல் செய்ய வருவார்களா என தேர்தல் அதிகாரிகள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். கோவை மாவட்ட அளவில் இதுவரை 320 பேர் நாமினேஷன் படிவம் பெற்று சென்று இருக்கிறார்கள்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் நூர் முகமது சுடுகாட்டில் இருந்து மண் சட்டி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக அவரை அலுவலக நுழைவாயில் முன்பு சட்டியை வாங்கி வைத்து நாமினேஷன் படிவத்துடன் அனுப்பினர். இவர் கோவை மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட முறை தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் வித்தியாசமான முறையில் வந்து மனு தாக்கல் செய்வது வழக்கம். இந்த முறையும் அதேபோல் வித்தியாசமாக அவர் மக்களை ஈர்க்கும் வகையில் வருகை தந்து மனு தாக்கல் செய்தார்.
