கோவையில் வாக்காளர் பட்டியல் ஜெராக்ஸ் எடுப்பு பணி தீவிரம்…
கோவை மாவட்டத்தில் சூலூர், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு உள்பட 10 சட்ட மன்ற தொகுதிகளில் தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது.
இந்த தொகுதிகளில் 318 வேட்பாளர்கள் 450 மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையில் மாற்று வேட்பாளர்கள் உள்பட 115 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
தற்போது 203 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று வரை வேட்பாளர்கள் தங்களது மனுக்களை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கோவையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர்கள் போட்டியிடும் சட்ட மன்ற தொகுதிக்கான வாக்காளர்கள் பட்டியல் வழங்கும் பணியில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்
. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் நகல் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் பணி முடியும். அனைத்து வேட்பாளர்களுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்.
