கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போட்டனர்…
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் வரும் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் 18,753 தேர்தல் பணி அலுவலர்கள் தபால் ஓட்டு போட விண்ணப்ப படிவம் வழங்கி வாங்கி இருக்கிறார்கள்.
இவர்களுக்கான தபால் ஓட்டு சீட்டு வழங்கப்பட்டது. வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் அடங்கிய தபால் ஓட்டு சீட்டுகளை பூர்த்தி செய்து இன்று நடந்த பயிற்சி வகுப்பில் ஒட்டு சாவடி பணி அலுவலர்கள் தபால் ஓட்டு பெட்டியில் போட்டனர்.
சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு ஆர்விஎஸ் கலை அறிவியல் கல்லூரி பயிற்சி மையத்தில் ஓட்டு போட்டனர். மேட்டுப்பாளையம் தொகுதியில் எஸ்எஸ்விஎம் பள்ளி மையத்திலும், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி மையத்திலும், கோவை வடக்கில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மையம்,
கோவை தெற்கில் நிர்மலா கல்லூரி மையம், சிங்காநல்லூர் தொகுதிக்கு பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி, கிணத்துக்கடவு தொகுதிக்கு கற்பகம் அகாடமி மையம், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதிக்கு மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மையத்தில் அரசு ஊழியர்கள் ஒட்டு போட்டனர்.
மாவட்ட அளவில், 16,992 அரசு ஊழியர்கள் தேர்தல் பணி என தபால் ஓட்டு சீட்டு பெற்றிருந்தனர். இவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்று தபால் ஓட்டு போட்டனர். வரும் 19ம் தேதி இறுதி கட்ட பயிற்சி வகுப்பு நடக்கவுள்ளது. இதில் விடுபட்டவர்கள் ஒட்டு போடலாம். இதிலும் ஓட்டு போட இயலாதவர்கள் ஓட்டு சாவடியில் ஓட்டு பதிவு செய்ய வரும் 23ம் தேதி தேர்தல் நாளில் தங்களது ஒட்டுக்களை பதிவு செய்யலாம்.
