கோவை மாநகராட்சி கஜானாவை காலி செய்யும் ஆகாய தாமரை…!

கோவை மாநகராட்சியின் கட்டுபாட்டில் உள்ள உக்கடம் வாலாங்குளம், பெரிய குளம் படகு துறையாக செயல்படுகிறது.

பூங்கா, வாக்கிங் தளம் என ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்பட்டு சுத்திகரிப்பு நிலையமும் அமைத்து பயன்பாட்டிற்கு வந்தும் இந்த குளங்களில் துர்நாற்ற பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. கோவை அரசு மருத்துவமனை கழிவு, சாக்கடை, பல்வேறு நிறுவனங்களின் கழிவுகள், நகரின் தெற்கு, மத்திய பகுதி சாக்கடைகளின் சங்கமமாக இந்த இரு குளங்களும் இருக்கிறது.

இங்கே கழிவு நீரை சுத்திகரிக்க பல கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதில் கழிவு நீரை சுத்தம் செய்து குளங்களில் விட்டிருந்தால் அசுத்தமான நீர் இருந்திருக்காது. ஆனால் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படாமல் இன்னும் சேறு சகதியான கருப்பு நிற குமட்டல் நீர் தான் குளங்களில் தேங்கியிருக்கிறது.

இதனால் இந்த இரு குளங்களில் ஆகாய தாமரைகள் பெரும்பகுதி படர்ந்து வளர்ந்து விட்டது. குளத்தில் உள்ள நடை தளத்தில் வாக்கிங் சென்றால் ஆகாய தாமரைகளின் நாற்றத்தை தாங்க முடியாத நிலை இருக்கிறது. குளங்களுக்கு வரும் சாக்கடை கால்வாய்கள் இதுவரை அடைக்கப்படவில்லை.

ஆகாய தாமரைகளை அகற்ற பெரியகுளம், வாலாங்குளத்திற்கு மட்டும் கடந்த 5 ஆண்டில் 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த செலவினால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகாய தாமரைகளை அகற்றினால் ஒரிரு மாதங்களில் அது படர்ந்து வேகமாக வளர்ந்து விடுகிறது. எனவே இதை அகற்றுவது இயலாத காரியமாக இருக்கிறது.

கடந்த பல ஆண்டாக இது முடியாமல் போனதால் தான் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வரப்பட்டது. சுத்திகரிப்பு நிலையத்தை முடக்கி விட்டு ஆகாய தாமரைகளை அகற்ற தொடர்ந்து மாநகராட்சியின் பணம் வீணாக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் கஜானாவை காலி செய்யும் இந்த திட்டத்தை கைவிட்டு சுத்திகரிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *