ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல க்யூ ஆர் கோடு அடையாள அட்டை…
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை வரும் நான்காம் தேதி நடக்க உள்ளது.
தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் காலை 8:00 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். இதில் எண்ணிக்கை நடத்த உள்ள அலுவலர்கள் அதிகாரிகள் போலீசார் மற்றும் அரசியல் கட்சியின் ஏஜென்டுகள் என 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 தொகுதிகளில் 183 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்
ஒவ்வொரு தொகுதிக்கும் 14 முதல் 20 டேபிள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு டேபிளிலும் ஒரு வேட்பாளர் சார்பில் ஒரு ஏஜென்ட் நியமனம் செய்யப்படுவார். ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் ஒரு தொகுதிக்கு 14 முதல் 20 ஏஜெண்டுகள் தேவை.
இந்த நிலையில் தற்போது எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதில் குழப்பமான சூழல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு ஏஜென்சிகள் எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் முரண்பாடுகள் காணப்படுகிறது. எனவே ஓட்டு எண்ணிக்கை நாளில் எண்ணிக்கை மையத்தில் பிரச்சனை எதுவும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு ஏற்ப கோவையில் இன்று நடந்த பயிற்சி வகுப்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது . ஓட்டு எண்ணிக்கை மிகச் சரியாக நடத்த வேண்டும் . பிழை எதுவும் இருக்கக்கூடாது. முறையாக ஆன்லைன் வெப்சைட்டில் அப்லோட் செய்ய வேண்டும் கட்சியினர் தகராறு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே உஷாராக இருங்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாருக்கு கூடுதல் உஷார் உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது .
வழக்கமாக அனைத்து வேட்பாளர்கள் மற்றும் கட்சி ஏஜெண்டுகளுக்கு தேர்தல் கமிஷன் அடையாள அட்டை வழங்கப்படும். ஆனால் இந்த முறை அடையாள அட்டை க்யூ ஆர் கோடு அமைத்து வழங்கப்பட உள்ளது. இந்த அடையாள அட்டை ஸ்கேன் செய்து எண்ணிக்கை மையத்திற்கு உரிய நபர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
கடந்த காலங்களில் நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது போலி அடையாள அட்டையுடன் கட்சியினர் சிலர் வந்து ஓட்டு எண்ணிக்கையின் போது தகராறு செய்ததாக புகார் பெறப்பட்டது . இந்த முறை அது போன்ற சூழல் ஏற்படாத வகையில் க்யூ ஆர் கோடு நடைமுறை கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வெளி நபர்களால் மோதல் ஏற்படுவது தவிர்க்கப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
