கோவை மாவட்டத்தில் நாளை ஓட்டு எண்ணிக்கை…!

கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை காலை முதல் ஓட்டு எண்ணிக்கை அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜிசிடி) நடக்கவுள்ளது.

மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3540 ஓட்டு சாவடிகளில், வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 15,223 ஓட்டு மெசின்கள் பயன்படுத்தப்பட்டது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு தொகுதிக்கு ஒரு இடம் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகே 10 இடங்களில் பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங்க் ரூம்) அமைக்கப்பட்டுள்ளது.

9 சட்டமன்ற தொகுதிகளுக்கு 14 டேபிள், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மட்டும் 20 டேபிள் என மொத்தம் 146 டேபிள்களில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு மைக்ரோ அப்சர்வர் பணியில் இருப்பார்கள். இதன்படி, மாவட்ட அளவில் 177 மைக்ரோ அப்சர்வர்கள் கவுண்டிங் டேபிள் மேற்பார்வை செய்வார்கள். கவுண்டிங் மேற்பார்வையாளர்கள் 177 பேர், கவுண்டிங் உதவியாளர்கள் 177 பேர் பணியில் இருப்பார்கள்.

தபால் ஓட்டுக்கள் தலா 4 சுற்றுக்கள் வீதம் 37 சுற்றுக்களில் எண்ணி முடிக்கப்படும். மேட்டுப்பாளையம் தொகுதியில் 14 டேபிளில் 26 சுற்றுக்களும், குலூரில் 28 சுற்றுக்களும், கவுண்டம்பாளையத்தில் 28 சுற்றுக்களும், கோவை வடக்கில் 25 சுற்றுக்களும், தொண்டாமுத்தூரில் 27 சுற்றுக்களும், கோவை தெற்கில் 20 சுற்றுக்களும், சிங்காநல்லூரில் 26 சுற்றுக்களும், கிணத்துக்கடவில் 27 சுற்றுக்களும், பொள்ளாச்சியில் 20 சுற்றுக்களும், வால்பாறையில் 19 சுற்றுக்களும் ஒட்டு எண்ணிக்கை நடத்தப்படும். ஒரு சுற்று 10 முதல் 15 நிமிடத்தில் முடிக்க வாய்ப்புள்ளது.

சுற்று விவரங்களை தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் வெளியிடப்படும். தவறான முடிவுகளை ஓட்டு எண்ணிக்கையின் போது வெளியிட கூடாது. எண்ணிக்கை மிக சரியாக இருக்க வேண்டும். அப்சர்வர்கள் மெசின்களை கவனிக்க வேண்டும். கேமரா, வீடியோ பதிவு இருக்கும், தவறு செய்தால் ஆதாரத்துடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

யாரும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவாக இருக்க கூடாது. பணிகளை கவனத்துடன் செய்ய வேண்டும். போலீசார் எண்ணிக்கை வளாகத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். எண்ணிக்கை டேபிள் அருகே வரக்கூடாது பிரச்னை செய்யும் ஏஜன்டுகளை வெளியேற்ற வேண்டும். வாக்குவாதம், மோதல் தவிர்க்க வேண்டும். அமைதியாக எந்த பிரச்னையும் இன்று ஓட்டு எண்ணிக்கையை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணிக்கை பணி மற்றும் அலுவலக பணியில் சுமார் 2 ஆயிரம் அலுவலர்கள் இருப்பார்கள். நேற்று முதல் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 4 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எண்ணிக்கை நடக்கும் நாளில், தடாகம் ரோடு, காந்தி பார்க் வனக்கல்லூரி ரோடு, பாரதி பார்க் ரோடு, மருதமலை ரோடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கையின் போது அலுவலர்கள் ஏஜன்டுகள் செல்போன் பயன்படுத்த கூடாது தேர்தல் நடத்தும் அலுவலர் மட்டும் செல்போன் பயன்படுத்தலாம்.

காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை சரியாக துவக்கப்படும். முதலில் அரைமணி நேரம் தபால் ஓட்டுக்கள் ஏஜன்டுகள் முன்னிலையில் பிரித்து எண்ணப்படும். அதற்கு பின்னர் காலை 8.30 மணிக்கு ஓட்டு மெசின்கள் திறக்கப்பட்டு ஒட்டுக்கள் எண்ணப்படும். ஓட்டு மெசின்கள் சுழற்சி முறையில் எடுத்து எண்ணப்படும்.

காலை 8.45 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியும். 8 மணி நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை முடிய வாய்ப்புள்ளது. பெரிய தொகுதிகளில் எண்ணிக்கை முடிய தாமதம் ஆகும். குறிப்பாக கவுண்டம்பாளையம் தொகுதியில் இரவு 8 மணி வரை ஒட்டு எண்ணிக்கை நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது ஏஜன்டுகள், வேட்பாளர்கள், அலுவலர்களுக்கு க்யூ ஆர் கோட் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

போலி நபர்கள் எண்ணிக்கை வளாகத்தில் நுழைய தடை விதித்து கடும் கட்டுபாட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *