கோவை பஸ்ஸில் மயக்க சாக்லேட் கொடுத்து மூதாட்டியிடம் நகை பறிப்பு…
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி.
இவரது மனைவி லட்சுமி (70) முன்னாள் அரசு ஊழியர். இவரது மகன் ராஜேஷ் (31) கோவை கணபதி பகுதியில் தங்கிருந்து தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
கடந்த 12ம் தேதி லட்சுமி தனது பேரனை பார்க்க ஈரோட்டில் இருந்து அரசு பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார். அவரது அருகில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். லட்சுமியுடன் பேச தொடங்கிய அவர், தனது பையில் இருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து சாப்பிட்டார். பின்னர் லட்சுமிக்கும் ஒரு சாக்லேட்டை கொடுத்தார். முதலில் மறுத்த லட்சுமி தொடர்ந்து வற்புறுத்தியதால் அதை வாங்கிச் சாப்பிட்டார்.
பாதி சாக்லேட் சாப்பிட்டதும் அது கெட்டு போயிருப்பதாக கூறி லட்சுமி சாக்லேட்டை வெளியில் வீசினார். அந்த பெண் என்ன ஆச்சு என்று கேட்டு தன்னிடம் இருந்த தண்ணீரை கொடுத்துள்ளார். அதனை குடித்த சிறிது நேரத்தில் லட்சுமி மயங்கினார். பின்னர் அந்த பெண் அவரது கழுத்தில் இருந்த சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான 6.5 பவுன் நகையை பறித்து தப்பினார்.
பஸ் சின்னியம்பாளையம் அருகே வந்த போது லட்சுமி மயங்கி கிடந்ததை பார்த்த கண்டக்டர் அதிர்ச்சி அடைந்தார். உடனே கண்டக்டர், டிரைவரிடம் கூறி பஸ்சை கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே நிறுத்தினர். தொடர்ந்து கண்டக்டர் மற்றும் டிரைவர், பயணிகள் உதவியுடன் லட்சுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து பீளமேடு போலீசார் மற்றும் லட்சுமியின் மகன் ராஜேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். போலீசார் லட்சுமியிடம் விசாரணை நடத்திய போது அவர் நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து பீளமேடு போலீசார் ராஜேஷ் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் பஸ்சில் லட்சுமியிடம் நகையை பறித்த பெண் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போலீசார் பஸ் வந்த வழித்தடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர். ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
