சிறுவாணி அணையில் தூறல் மழை…
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது.
இந்த அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 49.53 அடி இதில் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இன்னும் 3 மீட்டர் வரை மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தற்போது அணை நீர் மட்டம் டெத் ஸ்டோரேஜ் என்ற இறுதி கட்ட இருப்பு அளவை எட்டி விட்டது.
அணையில் இருந்து 4 கோடி லிட்டர் அளவிற்கும் குறைவாக தினமும் குடிநீர் பெறப்படுகிறது. தினமும் அணையில் இருந்து 10.14 கோடி லிட்டர் குடிநீர் பெற அனுமதி உண்டு. ஆனால் நீர் மட்டம் குறைவினால் அணையில் இருந்து குடிநீர் எடுப்பது குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், தென் மேற்கு பருவ மழை துவங்கியது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் தூறலாக துவங்கியது. நேற்று 6 மி.மீட்டர் அளவிற்கு மழை பெய்தது. வெயில் தாக்கம் குறைந்து விட்டது. ஒரிரு நாளில் கனத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது. கேரளாவில் பருவ மழை தீவிரமாக இருப்பதால் கட்டாயம் சிறுவாணியின் நீர் பிடிப்பு பகுதியில் மழை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை பெய்தால் தான் அணையின் நீர் மட்டம் உயரும். இல்லாவிட்டால் அடுத்த மாதம் 15ம் தேதி வரை மட்டுமே குடிநீர் வினியோகிக்க முடியும். மழை துவங்கியிருப்பதால் குடிநீர் வடிகால் வாரியத்தினர் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
