கோவையில் ஆன்லைன் டிரேடிங் என மூதாட்டியிடம் 1.66 கோடி ரூபாய் மோசடி…

கோவை வடவள்ளியில் 63 வயது மூதாட்டி வசித்து வருகிறார்.

இவரது கணவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டி தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் பார்த்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, அதில் ஆன்லைன் டிரேடிங் குறித்து ரீல்ஸ் வந்துள்ளது. அதன் விவரங்களை பார்ப்பதற்காக அவர் ரீல்சின் கீழ் இருந்த லிங்கை தொட்டுள்ளார்.

உடனே அவரது ‘வாட்ஸ் அப்’ எண் ஒரு வாட்ஸ் அப் குழுவில் மர்ம நபர்களால் இணைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த வாட்ஸ் அப் குழுவில் முன்னணி நிறுவனங்களில் பங்குகளை வாங்குவது, விற்பது குறித்து

பகிர்ந்து வந்துள்ளனர்.அதன் பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், அவரிடம் முதலீடு செய்து டிரேடிங் செய்து வந்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர்.

இதை நம்பி, மூதாட்டி அந்த மர்ம நபர் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, பல்வேறு தவணைகளாக ரூ.1 கோடியே 66 லட்சத்து 34 ஆயிரத்தை அனுப்பி வைத்தார். இதையடுத்து மூதாட்டி பங்கு சந்தையில் இருந்து பணத்தை எடுக்க முடிவு செய்தார்.

ஆனால், அந்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அவரிடம் பேசிய மர்ம நபரை தொடர்பு கொள்ள முயன்ற போது அதுவும் முடியவில்லை. அப்போதுதான் மூதாட்டி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் மோசடி செய்யப்பட்ட பணம் ரூ.1 கோடிக்கு மேல் இருந்ததால் வழக்கை போலீசார் சென்னை தலைமையிடத்து சைபர் கிரைமிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீசார் ஆன்லைன் மோசடி நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *