கோவையில் ரயில் பாதையில் விளையாடிய சிறுவன் உயிர் பறிபோனது…
கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.
இவர் மனைவி ஜெயபிரியா. இவர்களது மகன் பிரகதீஷ் (8), அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் இன்று மதியம் பிரகதீஷ் வீட்டில் விளையாட செல்வதாக கூறி தனது சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே சென்றார்.
பின்னர், ஒண்டிப்புதூர் சவுடேஸ்வரி நகரில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றார். அங்கு ரயில் வருகிறதா? என தண்டவாளம் அருகே நின்று வேடிக்கை பார்த்தார். அப்போது ரயில் வருவதை பார்த்த பிரகதீஷ் தண்டவாளத்தின் ஓரத்தில் நடந்து சென்றார்.
அப்போது, எதிர்பாராத விதமாக பிரகதீஷ் மீது ரயில் மோதியது. இதில், பிரகதீசுக்கு வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோவை ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவன் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட சென்ற சிறுவன் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
