பதற வைக்கிறது காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்…

கோவை காந்திபுரத்தில் உள்ள டவுன் பஸ் ஸ்டாண்ட் கடந்த 29-03-1960 ஆண்டு கோவை நகராட்சியாக இருந்த காலத்தில் அமைக்கப்பட்டது.

அப்போதைய தமிழக கவர்னரின் ஆலோசகர் லட்சுமி நாராயணன், கோவை மாவட்ட கலெக்டர் ஆக இருந்த சிவப்பிரகாசம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த பஸ் ஸ்டாண்ட் தான் கோவையின் பிரதானமான பஸ் ஸ்டாண்டாக இருந்தது. இதற்கு பிறகு தான் கோவை நகரில் இதர இடங்களில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது.

இந்த டவுன் பஸ் ஸ்டாண்ட் தற்போது அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் பாதுகாப்பு இல்லாத கட்டிடத்தில் இருக்கிறது. பஸ் ஸ்டாண்ட்டில் பயணிகள் உட்காருவதற்கு போதுமான நாற்காலிகள் அமைக்கப்படவில்லை. குடிநீர் குழாய்கள் இருக்கிறது. வாட்டர் ஃபில்டர் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எதிலும் குடிநீர் வருவதில்லை. பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் தரைதளம் பெயர்ந்து மேடு பள்ளமாக இருக்கிறது. பஸ்கள் திரும்புவதற்கு போதுமான இட வசதி செய்யப்படவில்லை. ஒரே நேரத்தில் அதிக பஸ்கள் நிறுத்தப்படுவதால் எப்போதும் இங்கே போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

இரவு நேரங்களில் போதை கும்பல் இங்கே தகராறு செய்வதும் அடிதடி மோதலில் ஈடுபடுவதும் வாடிக்கையாக நடக்கிறது. பயணிகள் பலர் இரவு நேரத்தில் பஸ் ஸ்டாண்ட் உள் பகுதியில் நிற்பதற்கு பயந்து பஸ் ஸ்டாண்ட் வெளியே காத்திருக்கும் அவல நிலைமை இருக்கிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் பணியில் இருப்பதில்லை . திறந்து கிடக்கும் அலுவலகத்தில் யார் வேண்டுமானாலும் சென்று வரும் நிலைமை இருக்கிறது. பஸ் ஸ்டாண்ட் கூரைகள் பெயர்ந்து கீழே விழும் நிலைமையில் உள்ளது. தற்போது கூரைக்கு பெயிண்ட் அடித்து புதுசு போல் காட்டியுள்ளனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகம் இந்த பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்க எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. இது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *