கோவை கலெக்டர் ஆபீஸில் பல தடவ மனு கொடுத்தாச்சு… உதவ மாட்டேங்கிறாங்க

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது.

இதில் கலெக்டர் பவன் குமார், வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அன்னூர் கோவிந்த நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கீதா (30) தனது குழந்தைகளுடன் வந்து புகார் மனு அளித்தார். அப்போது அவர் தனது கணவர் 4 ஆண்டிற்கு முன் இறந்து விட்டார்.

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இலவச மனை பட்டா கேட்டு 5 முறை ஏற்கனவே விண்ணப்ப மனு கொடுத்திருந்தேன். ஆனால் எனது விண்ணப்பம் இதுவரை பரிசீலனை செய்யப்படவில்லை. நான் கூலி வேலைக்கு சென்று என் குழந்தைகளை காப்பாற்றுகிறேன். இலவச மனை பட்டா அல்லது வீடு கிடைத்தால் எனக்கு உதவியாக இருக்கும் எப்போது வந்தால் பழைய விண்ணப்பங்களை கண்டுகொள்ளாமல் மீண்டும் புதிதாக விண்ணப்ப மனுக்கள் வாங்குகிறார்கள்.

கடந்த காலங்களில் நாங்கள் கொடுத்த மனுக்கள் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை. ” என்றார்.

கீரணத்தம் விஜிபி பிரேம் நகர் பகுதியை சேர்ந்த நிவநீதா (31) என்பவர் விண்ணப்ப மனு அளித்தார். அவர், எனக்கு மிகவும் அரிதான கோல் வியாதி இருக்கிறது. எனக்கு மட்டுமில்லை எனது மகன் மற்றும் எனது தந்தை சகோதரி ஆகியோருக்கும் இந்த தோல் வியாதி இருக்கிறது. நாங்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற வகையில் அரசிடம் பல்வேறு உதவிகளை கேட்டு இருக்கிறோம்.

நான் இலவசமாக மூன்று சக்கர ஸ்கூட்டர் கேட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் விண்ணப்பம் மனு கொடுத்திருந்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு எனது கோரிக்கை மனுவை பரிசீலனை செய்து வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

பச்சாபாளையம் பகுதியை சேர்ந்த குபேந்திரன் (65) என்பவர் அளித்த புகார் மனுவில், “நான் மிகுந்த வறுமை நிலைமையில் இருக்கிறேன். உடல் நலன் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கிறேன் என் வீட்டிற்கு என்னால் வாடகை கூட வழங்க முடியவில்லை. வீட்டை காலி செய்ய சொல்கிறார்கள்.

எனக்கு எந்த ஆதரவும் கிடையாது. எனக்கு மாத வாடகை வழங்கி உதவி செய்ய மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அன்னூர் ஆம்போதியை சேர்ந்த பிரியா (28) என்பவர் எங்கள் பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தாட்கோ மானியமாக 5 லட்ச ரூபாய் வரை கடன் உதவி வழங்க வேண்டும். இதன் மூலமாக நாங்கள் சுய தொழில் செய்து முன்னேற முடியும். அரசு உதவி செய்ய வேண்டும். ” என்றார்.

நஞ்சுண்டாபுரம் காமாட்சியம்மன் கோயில் வீதி பகுதியை சேர்ந்த ஜெயபால் அளித்த மனுவில் எனக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கடந்த 1997ம் ஆண்டு ஒதுக்கீட்டில் வீடு வழங்க ஆணை வழங்கப்பட்டது. இதுவரை எனக்கு வீடு தரவில்லை. நான் வீடு கேட்டு தொடர்ந்து மனு தருகிறேன்.

மன வளர்ச்சி பாதித்த மகனுடன் நான் கஷ்டப்படுகிறேன். எனக்கு வயதாகி விட்டது. கடைசி காலத்திற்கு அரசு கருணையுடன் எனக்கு வீடு வழங்க வேண்டும். ” என்றார்.

கவுண்டம்பாளையம் பிரபு நகர் பகுதியை சேர்ந்த பாத்திமா என்பவர் அளித்த புகார் மனுவில், “நான் வசிக்கும் வீட்டிற்கு பட்டா இல்லை என்பதால் மின் இணைப்பு வழங்கவில்லை. என் வீட்டின் அருகேயுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு தந்து விட்டார்கள்.

எனது வீட்டிற்கு சொத்து வரி விதிப்பு இருக்கிறது. மின் இணைப்பு இல்லாமல் வீட்டில் குழந்தைகள் பள்ளி பாடங்களை படிக்க முடியாமல் தவிக்கிறார்கள். கொசு கடியால் தூங்க முடியாமல் இருக்கிறோம். 30 ஆண்டுகளாக மின் இணைப்புக்காக காத்திருக்கிறோம். அரசு இன்னும் கருணை காட்டவில்லை, ” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *