drone survey: கோவையில் ஆழமான, அபாய கல் குவாரிகள் விரைவில் மூடல்…
கோவை மாவட்டத்தில் அதிக ஆழம், அபாயமான கல் குவாரிகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 151 கல் குவாரிகள் இருக்கிறது. இதில் கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம வளங்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு குறித்த விவரங்கள் சேகரிக்க டிரோன் சர்வே நடத்த உத்தரவிடப்பட்டது. அரசுக்கு முறையாக ராயல்டி மற்றும் உரிய பசுமை வரி செலுத்தப்பட்டதா என கண்டறிந்து அதனை பெற வேண்டும்.
முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள் உரிமம் இன்றி செயல்பட்டால் அதனை மூடி சீல் வைக்க வேண்டும். குவாரிகளில் கனிமம் எடுக்கும் அளவு முறைப்படுத்த வேண்டும். தினமும் எத்தனை கனமீட்டர் அளவிற்கு கனிம பொருட்கள் சேகரிக்கப்படுகிறது.
கனிமங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலமாக கண்டறியப்பட்டு வருகிறதா, கேரளா மாநிலத்திற்கு சப்ளை செய்யப்படும் கனிமங்கள் அளவு குறித்த விவரங்கள் இருக்கிறதா என கோவை மாவட்ட கனிய வளத்துறையினரிடம் விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
மாவட்ட இன்று டிரோன் சர்வே துவக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் 139 குவாரிகளில் டிரோன் சர்வே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 குழுவினர் கோவை கிணத்துக்கடவு, சூலூர், பொள்ளாச்சி வட்டாரத்தில் டிரோன் மூலமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு குழுவிலும் 27 பேர் இடம் பெற்றுள்ளனர். ஒரு வாரம் இந்த சர்வே நடத்தி வீடியோ பதிவுகள், கனிமங்களின் அளவுகளுடன் கூடிய ஆதாரங்கள் சேகரிக்கப்படும். பின்னர், அத்துமீறி அதிக கனிமம் எடுக்கப்பட்ட குவாரிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அரசுக்கு ராயல்டி தராமல் கல் குவாரிகளில் அதிக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தால் அந்த குவாரிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
அபராதம் மட்டுமின்றி அதிக ஆழம் ஆபத்தான கல் குவாரிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் குவாரிகள் மூடப்படும் என கனிம வளத்துறையினர் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் கடந்த காலங்களில் 22 குவாரிகளில் டிஜிபிஎஸ் சர்வே செய்யப்பட்டது.
அனைத்து குவாரிகளையும் அளவீடு செய்யவேண்டும் என்ற திட்டம் பின்னர் வாபஸ் பெறப்பட்டது. சில குவாரிகளின் மீது பெயரளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மாவட்ட அளவில் கல் குவாரிகளில் டிரோன் சர்வே நடத்தப்பட்டு வருவது வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் தவறு செய்யும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடக்கூடாது என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
