சோகத்தையும் பாரத்தையும் ஏற்ற சுமைதாங்கிகள்…

பெருவழிகளில் வணிகர் தங்கி செல்ல தாவளம் என அழைக்கப்படும் தங்கும் சாவடி உருவாக்கப்பட்டது.

பொது இடத்தில் பொது ஜனங்கள் இந்த இலவச தங்கும் கூடம் ஏற்படுத்தப்பட்டது. சாவடிகள் 5 மைல், 10 மைல் தொலைவுகளில் அமைந்திருக்கும். 200 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்களின் பயணம் கால்நடையாகவே அமைந்தது. பாலக்காடு கணவாய் வழியாக மூன்று பண்டைய பெருவழிகள் கிழக்கு வழியாக உருவாக்கப்பட்டன.

ஆனைமலை வடபூதி நத்தம், சி.கலையமுத்தூர், பழனி, திண்டுக்கல், மதுரை, திருத்தங்கல் வழியாக அழகன்குளம் செல்லும் வகையில் அமைந்தது. இரண்டாவது பெருவழி பேரூர் வெள்ளலூர், சூலூர், பல்லடம், காங்கேயம், கரூர், உறையூர் வழியாக பூம்புகார் வரை சென்றது. மூன்றாவது பெருவழி கோவை, அவினாசி, விஜயமங்கலம், ஈரோடு, சேலம், ஏத்தாப்பூர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல் வழியாக மாமல்லபுரம் சென்றது.

சோழப்பெருவழி, கொழுமம் பெருவழி, கொங்கு குலவல்லி வழி என இந்த வழிகள் அமைக்கப்பட்டன. செல்வந்தர்கள் குதிரை மீது அமர்ந்தும், கால்நடை வளர்ப்போர் மாட்டு வண்டி மூலமாகவும் பயணித்தனர். வசதியற்றவர்கள் தலையில் உணவு, பண்டங்களை சுமந்து செல்வது வாடிக்கையாக இருந்தது. பயணிப்போர் வசதிக்காக ஆங்காங்கே சுமை தாங்கி கற்கள் அமைக்கப்பட்டன.

தலை சுமையை இதில் இறக்கி வைத்து இளைப்பாறி செல்ல பாதையோரம் இந்த சுமை தாங்கி கற்கள் அமைந்திருந்தன. கால போக்கில் தாவளங்களும் அழிந்து போனது. சுமை தாங்கி கற்களும் அழிந்தது. கோவை வட்டாரத்தில் ஆங்காங்கே காட்டு பகுதியில் சில சுமை தாங்கிகள் காட்சி பொருளாக இருக்கின்றன.

சில சுமை தாங்கி கற்கள் எடை தாங்கும் வகையில் ஓட்டையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இறந்த முன்னோர்கள் நினைவாகவும் சில சுமை தாங்கிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த சுமை தாங்கிகள், ‘என் மனதில் உள்ள பாரத்தை இதில் இறக்கி வைத்திருக்கிறேன், இது என்றும் உங்கள் நினைவாக இருக்கும், “என வலியுறுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்டது என கல்வெட்டு ஆராய்ச்சிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *