டெலிவரி தொழிலாளர்களின் ஓய்வு கூடம் வேஸ்ட்…
கோவை நகரில் இரு இடங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட டெலிவரி ஊழியர்கள் ஓய்வு கூடத்திற்கு யாரும் செல்லாததால் பல லட்ச ரூபாய் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு தனியார் டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு உணவு டெலிவரி, ஆன்லைன் பொருட்கள் டெலிவரி உள்ளிட்ட சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பட்டதாரி வாலிபர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆன்லைன் ஆர்டர்களும் அதிகளவில் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் கடந்த ஆண்டு டெலிவரி ஊழியர்களுக்காக மாநகராட்சி சார்பில் இணைய ஊழியர்களுக்கான ஓய்வு கூடம் அமைத்து கொடுக்கப்பட்டது. இதில் இருக்கை வை-பை வசதி, ஏசி வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்கப்பட்டன. இங்கு மழை மற்றும் வெயில் காலங்களில் வெளியே அலையும் டெலிவரி ஊழியர்கள் ஒய்வு எடுத்து கொள்ள வசதியாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதேபோல், தொழில் நகரமான கோவையிலும் நூற்றுக்கணக்கான டெலிவரி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஒய்வு எடுக்க வசதியாக கோவை நகரின் பிரதான இடமான காந்திபுரம் மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் டெலிவரி ஊழியர்கள் கூடம் இணைய தொழிலாளர் கூடம் மாநகராட்சி சார்பில் தலா ரூ. 16.82 லட்சம் மதிப்பீட்டில் கட்டி கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த இரு ஓய்வு கூடங்களும் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு சார்ஜிங் வசதி, ஏசி. கழிவறை குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 20 பேர் வரை பயன்படுத்தலாம். இதேபோல், ஆர் எஸ்.புரத்திலும் இணைய தொழிலாளர் கூடம் திறக்கப்பட்டது. இந்நிலையில், காந்திபுரத்தில் செயல்பட்டு வந்த இணைய தொழிலாளர் கூடம் மூடப்பட்டு விட்டது. ஆர்.எஸ்.புரத்தில் மட்டுமே ஓய்வு கூடம் செயல்படுகிறது.
இதனை ஒரு சிலர் பயன்படுத்தி வந்தாலும், மாலை 6 மணிக்கே மூடி விடுவதால் டெலிவரி ஊழியர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து ஊழியர்கள் கூறுகையில், “ஆர்.எஸ்.புரத்தில் உள்ள இணைய தொழிலாளர் கூடத்தை மாலை 6 மணிக்கு பூட்டி விடுவதால் ஓய்வு எடுக்க முடியவில்லை. பொதுவாக மாலை நேரத்திற்கு பிறகுதான் அதிகளவில் ஆர்டர்கள் வருகின்றன. சில நேரங்களில் இரவில் மழை பெய்தால் ஓய்வு எடுக்க முடிவதில்லை.
கடை மற்றும் வணிக வளாகம் முன்பு நிற்க வேண்டி உள்ளது. எனவே இதனை இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்க வேண்டும். சீக்கிரம் பூட்டுவதால் ஊழியர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களிடையே வரவேற்பு குறைந்து வருகிறது.” என்றனர். இந்த இணைய தொழிலாளர் கூடம் குறித்து சில ஊழியர்களுக்கு இன்னும் தெரியவில்லை. இதன் காரணமாகவே யாரும் அங்கு செல்வதில்லை என்ற பரவலான கருத்தும் நிலவுகிறது.
எனவே பல லட்சம் ரூபாயில் தயாரான இந்த இணைய தொழிலாளர் கூடத்தை அதிகளவில் ஊழியர்கள் பயன்படுத்தும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
