Coimbatore digital arrest scam: ரூ.5.50 கோடி அள்ளி கொடுத்த தொழிலதிபர்… !

கோவை ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்த 72 வயது தொழிலதிபர் மனைவியுடன் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில், பேசிய நபர் தான் போலீஸ் அதிகாரி என்றும், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பயங்கரவாதிகளுக்கு பல கோடி ரூபாய் பணம் அனுப்பி வைத்துள்ளீர்கள் என்றும், இதனால் நாங்கள் உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்து உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், அவரிடம் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது அப்படி வெளியே சென்றால் எங்கள் போலீசார் உங்களின் வீட்டின் அருகே ரகசியமாக நின்று கண்காணித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் உங்களை கைது செய்துவிடுவார்கள் என மிரட்டி உள்ளனர்.

தொடர்ந்து டிஜிட்டல் அரஸ்ட் செய்து இருப்பதை வீட்டில் உள்ள உங்களது மனைவியிடமும் தெரிவிக்க கூடாது என கூறியுள்ளனர். இதனால் பயந்து போன அவர் யாரிடமும் கூறாமல் இருந்து வந்தார். இதனையடுத்து அந்த மர்ம நபர்கள், அவரிடம் உங்கள் வங்கி

கணக்கை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதில் வைத்துள்ள பணத்தை, நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு அனுப்பி வையுங்கள், நாங்கள் ஆய்வு

செய்துவிட்டு, அந்த பணத்தை மீண்டும் உங்களுக்கு அனுப்பி வைத்து விடுவோம் என கூறி உள்ளனர். உடனே அவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 .50 கோடி மை 2 தவணைகளாக கடந்த 7 மற்றும் 8ம் தேதி அனுப்பி வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, மர்ம நபர்கள் உங்கள் வைப்பு கணக்கில் உள்ள பணத்தையும் அனுப்பி வையுங்கள் என்றுள்ளனர். இதனால் அவர் வங்கிக்கு சென்று வைப்பு கணக்கில் உள்ள ரூ.3 கோடியை மர்ம நபர்களுக்கு அனுப்ப முயற்சி செய்துள்ளார்.

இதனை பார்த்து சந்தேகம் அடைந்த வங்கி அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். ஆனால், அவர் சரியான பதில் கூறவில்லை. இதனால், வங்கி அதிகாரிகள் அவரை வீட்டிற்கு சென்று மறுநாள் வரும் படி கூறி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், வங்கி அதிகாரிகள் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சைபர் கிரைம் போலீசார் 3 பேர் நேற்று மாலை அவரின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அதற்கு அவர் தான் சொந்த தேவைக்கு பணத்தை எடுத்ததாகவும், வேறு எந்த காரணமும் இல்லை என்றும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார்.

சந்தேகம் அடைந்த போலீசார் அவரது செல்போன் மற்றும் சில தொழில் நுட்ப ஆவனங்களை ஆய்வு செய்தனர். அதில் அவரிடம் டிஜிட்டல் அரஸ்ட் என மிரட்டி மர்ம நபர்கள் ரூ.5.50 கோடி பணம் பறித்து தெரித்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரிடம் டிஜிட்டல் அரஸ்ட் என்பது போலி என விளக்கியுள்ளனர். ஆனால் அவர் அதனை ஏற்று கொள்ள மறுத்துள்ளார். பின்னர், ஆர்.எஸ்.புரம் போலீசார், சைபர் கிரைம் மர்ம நபர்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினர். போலீசாரின் உடனடி நடவடிக்கையால் முதியவரின் ரூ.3 கோடி தப்பியது. தொடர்ந்து போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *