Covai GH பஸ் ஸ்டாப்பில் தூங்குனா பர்ஸ் பறிபோகும்… !
கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் இரவு நேரங்களில் சிலர் தூங்குகிறார்கள். சமையல் வேலை, இதர கூலி வேலை செய்யும் வெளியூர்காரர்கள் இங்கே தங்கியிருப்பதாக தெரிகிறது.
இவர்கள் குறிப்பிட்ட சில பகுதியில் மட்டுமே படுத்து தூங்குவதாக தெரிகிறது. வழக்கமாக தங்கும் நபர்கள், அந்த பகுதியில் வேறு நபர்கள் வந்து தூங்குவதற்கு அனுமதிப்பதில்லை. இதன் காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி மோதல், வாக்குவாதம் ஏற்படுகிறது. சிலர் குடும்பத்தினருடன் இங்கே தங்கியுள்ளனர்.
அரசு மருத்துவமனையில் நோயாளியை அனுமதித்து விட்டு பார்வையாளர்களாக காத்திருக்கும் சிலரும் இந்த பஸ் ஸ்டாப்பில் தங்குவது வழக்கமாக இருக்கிறது. இரவு நேரங்களில் இங்கே மர்ம நபர்கள் தூங்கும் நபர்களின் பொருட்களை திருடி செல்வதாக தெரிகிறது. மூட்டை பேக்கில் வைத்திருக்கும் பணம், செல்போன்களை திருடி சென்று மது வாங்கி குடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திருட்டு பொருட்களை வாங்குவதற்கு ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் சிலர் சுற்றி கொண்டிருப்பதாக தெரிகிறது. இரவு ரோந்து பணியில் இருக்கும் போலீசார் இந்த திருட்டு கும்பல் மற்றும் திருட்டு பொருட்களை வாங்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் இரவு நேரத்தில் பிளாட்பாரம், பஸ் ஸ்டாப்பில் தங்கியிருப்பதால் அடிக்கடி சிங்கப்பெண் பாதுகாப்பு படையினர் ரோந்து பணி செய்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
