கோவையில் 6 டன் கடத்தல் ரேஷன் அரிசி கடைகளுக்கு ஒப்படைக்க உத்தரவு

கோவையில் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட 6,270 கிலோ ரேஷன் அரிசி பொதுவிநியோக திட்டத்திற்கு பயன்படுத்த ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, பொள்ளாச்சி அலகு சார்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பொது விநியோகத் கிட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் கடத்த முயன்றதாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 6,270 கிலோ அரிசி, 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

இந்த வழக்குகளில் கைப்பற்றப்பட்ட அரிசி மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் ஆஜராகவில்லை மற்றும் அபராத தொகை செலுத்தவில்லை.

மேலும், விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி ரேஷன் அரிசி என உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மொத்தம் 6,270 கிலோ ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைத்து, அதனை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்படுத்தவும், அதற்கான மதிப்புத்தொகையை காசோலையாக வழங்கவும் கோவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முதுநிலை மண்டல மேலாளருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுரேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட 16 இருசக்கர வாகனத்தை ஏலம்விட உரிய முன்மொழிவுகளை அனுப்பி வைக்க பொள்ளாச்சி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *