பெருமாள் முடி, மேல்முடி மலை கோயிலுக்கு செல்ல கட்டுப்பாடு…

கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலுள்ள கோயில்களில் வனச்சூழலை பாதுகாப்பதுடன் பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், மாவட்ட அளவிலான இணைய வழி ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் அரசுத்துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, வருவாய் கோட்டாட்சியர்கள் வினோத்குமார், மாருதிபிரியா, மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி, துணை காவல் கண்காணிப்பாளர்கள், அறநிலையத்துறை உதவி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலெக்டர் பவன்குமார் கூறியதாவது: புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள்முடி மற்றும் மேல்முடி கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

இந்த இரண்டு கோயில்களும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், அதிகளவில் பக்தர்கள் கூடுவது வனப்பகுதியை பாதுகாத்தல், வன உயிரினங்கள் மற்றும் பல்லுயிர்களை பாதுகாத்தல், குப்பைகள் சேராமல் தடுத்தல், காட்டுத்தீ ஏற்படாமல் கடுத்தல் மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது போன்றவற்றில் சிரமங்கள் ஏற்படுகின்றன.

இதனால், புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள்முடி மற்றும் மேல்முடி கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி, பெருமாள்முடி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாங்கரை சோதனைச்சாவடியை பயன்படுத்த வேண்டும். மேல்முடி செல்லும் பக்தர்கள் பாலமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சோதனைச்சாவடி வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

தடாகம் வழியாக செல்ல தடை செய்யப்படுகிறது. மேல்முடி மற்றும் பெருமாள்முடி செல்லும் பக்தர்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும், தரிசனம் முடித்த பக்தர்கள் மாலை 4 மணிக்குள் அந்தந்த சோதனைச்சாவடியை வந்தடைய வேண்டும். இனிவரும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள்முடி கோயிலுக்கு அதிகபட்சம் 1,000 எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மேலும், வாகனங்கள் அதிகபட்சமாக 250 மட்டுமே அனுமதிக்கப்படும் மேலும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மேல்முடி கோயிலுக்கும் அதிகபட்சம் 500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதிகபட்சமாக 150 வாகனங்களின் அனுமதிக்கப்படும்.

வனப்பகுதியை சுத்தம் செய்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்காக, ஒரு நபரிடமிருந்து ரூ.15 பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கப்படும். சுகாதாரத்துறையினரால் முறையான உடல்நலப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பையும், வனப்பகுதியின் இயற்கை வளங்கள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பையும் உறுதி செய்ய பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2 thoughts on “பெருமாள் முடி, மேல்முடி மலை கோயிலுக்கு செல்ல கட்டுப்பாடு…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *