கோவையில் மத்திய சிறை வளாகத்தில் தப்பிய கைதி சிக்கினார்…

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் ராகவன் (25). கோழி காரன் என அழைக்கப்படும் இவர் மீது பல்வேறு மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ஈரோட்டில் ஒரு திருட்டு ட்டு வழக்கில் ராகவனை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, பெங்களூரில் ஒரு திருட்டு வழக்கில் கர்நாடகா போலீசார் ராகவனை சிறையில் தேடி வந்தனர். அப்போது, ராகவன் கோவை மத்திய சிறையில் இருப்பது கர்நாடக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, கர்நாடகா போலீசார் கடந்த ஜூன் மாதம் கோவைக்கு வந்து அவரை கைது செய்து வேனில் கர்நாடகா அழைத்து சென்றனர்

வேன், அன்னூர் அருகே சென்ற போது ராகவன் சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறி, போலீசாரிடம் இருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 30ம் தேதி தப்பி ஓடிய ராகவனை பவானியில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை போலீசார் கோவை அழைத்து வந்தனர்.

அவரை, போலீசார் நள்ளிரவு 1 மணியளிவில் மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்ற போது மீண்டும் போலீசாரிடம் இருந்து தப்பி சென்றார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், மாநகர மற்றும் மாவட்ட போலீசார் அடங்கிய 6 தனிப்படை அமைக்கப்பட்டு ராகவனை தேடி வருகின்றனர்.

இத்தனிப்படையினர் ஈரோடு, கேரளா என பல்வேறு இடங்களுக்கு விரைந்துள்ளனர். இந்த நிலையில் ராகவன் சிறையில் இருந்து தப்பி பைக்கை திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனிப்படையினர் பவானி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ராகவனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, ராகவன் கேரள போலீசாரிடம் இருந்து தப்பியதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

கைதி ராகவன் சிறையில் இருந்து தப்பி அந்த வழியாக வந்த லாரியில் ஏறி சென்றுள்ளார். பின்னர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே இறங்கி அங்கிருந்த பைக்கை திருடி சென்றுள்ளார். பைக் கிருடு போனது குறித்தும் ராகவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்படையினர் பைக் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, ராகவன் இலங்கை அகதி என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பவானி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ராகவன் கர்நாடகா, அன்னூர் போலீசாரிடம் தப்புவதற்கு முன்பே கேரளாவில் கேரளா போலீசார் கைது செய்து சிறைக்கு அழைத்து சென்ற போது தப்பியதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இன்று ராகவனை பவானிசாகர் பகுதியில் அன்னூர் போலீசார் பிடித்தனர். இவர் டிரோன் மூலமாக இருக்கும் இடம் கண்டறிந்து போலீசார் கைது செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவரை நாளை கோவை மத்திய சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *