கோவை குற்றாலத்தில் வெள்ளம் சுற்றுலா பயணிகளுக்கு தடை…
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு கவுண்டம்பாளையம், நல்லாம்பாளையம், சங்கனூர், கணபதி, காந்திமாநகர், பீளமேடு, உக்கடம், டவுன்ஹால், காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஆவாரம்பாளையம், கணபதி பி அண்ட் டி காலனி பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிப்பட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சியினர் மின் மோட்டார் மூலமாக அங்கிருந்த தண்ணீரை வெளியேற்றினர்.
மேலும், அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னர், நல்லாம்பாளையம் ரயில்வே பாலம் கிக்கானிக் பள்ளி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சியினர் மோட்டார் உதவியுடன் அகற்றினர். தவிர, மழையால் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று காலையிலும் பல இடங்களில் மழை பெய்தது. தொண்டாமுத்தூர் அடுத்த பூலுவபட்டி அருகே சிறுவாணி ரோட்டில் பெரிய கருவலே மரம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். நேற்று முன்தினம் காலை 7.30 மணி முதல் நேற்று காலை 7.30 மணி வரை மாவட்டத்தில் மொத்தம் 296.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதில், வேளாண் பல்கலைக்கழகம் 39மி மீ, பெரியநாயக்கன்பாளையம் 47மி.மீ, மேட்டுப்பாளையம் 2மி.மீ. பில்லூர் அணை 79மி.மீ, அன்னூர் 10மி.மீ, கோவை தெற்கு 18மி.மீ, தொண்டாமுத்தூர் 8மி.மீ, சிறுவாணி அடிவாரம் 53மி.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து, மாவட்டத்தில் இன்றும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
