போட்டோகிராபர் கொலை : சடலம் வாங்க மறுத்து மறியல் போராட்டம்…
கோவை தடாகம் ரோடு மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (24).
போட்டோகிராபர் இவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் போட்டோ சூட் இருப்பதாக தனது குடும்பத்தினருடன் கூறி சில நாட்களுக்கு முன்பு சென்றார்.
ஆனால் அவர் திரும்ப வரவில்லை. இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் தடாகம் போலீசில் புகார் அளித்தனர். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே ரயில் பாதையில் வாலிபர் சடலம் கிடந்தது. போத்தனூர் ரயில்வே போலீசார் விசாரணை செய்தபோது காணாமல் போன பிரவீன் என தெரிய வந்தது. போலீசார் சடலத்தை கைப்பற்றிய விசாரித்த போது பிரவீன் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது கரூர் பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (26) மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் போட்டோ எடுக்க வேண்டும் எனக் கூறி செல்போனில் பிரவீனை அழைத்துள்ளனர். இதற்கு பிரவீன் சம்மதம் தெரிவித்து அவர்கள் கூறியபடி கிணத்துக்கடவு பகுதிக்கு சென்றார். அங்கே காரில் மனோஜ் குமார் மற்றும் கார்த்திகேயன் காத்திருந்தனர்
அவர்கள் பிரவீனை அழைத்து சென்றுள்ளனர். செல்லும் வழியில் அவர்கள் மதுபானம் வாங்கி கொடுத்துள்ளனர். அதிக மது குடித்து பிரவீன் மயக்க நிலையில் இருந்துள்ளார். அப்போது மனோஜ் குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் பிரவீன் கழுத்தை நெறித்து கொலை செய்து தண்டவாளத்தில் சட்டத்தை வீசி சென்று விட்டனர்.
மனோஜ் குமார் இன்ஸ்டாகிராம் மூலமாக கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். அந்த பெண்ணுடன் பிரவின் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இது மனோஜ் குமாருக்கு பிடிக்கவில்லை. பிரவீன் இருந்தால் தனது காதல் நிறைவேறாது அவர் தனது காதல் திருமணத்திற்கு இடையூறாக இருப்பார் என மனோஜ் குமார் கருதினார். எனவே போட்டோ சூட் நடத்த வேண்டும் என கூறி செல்போனில் அழைத்து பிரவீனை கொலை செய்து காதலியை தனது வசப்படுத்த திட்டமிட்டு இந்த கொலை செய்திருப்பதாக விசாரணையின் போது தெரிவித்தார் .
தண்டபாளத்தில் சடலம் கிடந்ததால் போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அவர்கள் சரியாக விசாரிக்காமல் தற்கொலை என வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் குற்றவாளிகள் இரண்டு பேர் கோர்ட்டில் ஆஜரான பின்னர் தான் இது திட்டமிட்ட கொலை என தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட பிரவீன் எங்கே சென்றாலும் அந்த விபரங்களை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பது வழக்கம். அவர் வைத்த ஸ்டேட்டஸ் பதிவு மூலமாகவே அவர் எங்கே எங்கே சென்றார் என்ற விவரங்களை உறவினர்கள் அறிய முடிந்தது. இந்த விவரங்களை போலீசாருக்கு தெரிவித்து துப்பு துலக்க உதவினர்.
இந்த நிலையில் இன்று மதியம் பிரவீன் உறவினர்கள் இ எஸ் ஐ மருத்துவமனையில் சடலத்தை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உறவினர்கள் கூறுகையில் பிரவீன் அந்த இளம் பெண் காதலித்து வந்தனர். இந்த காதலை பிடிக்காமல் மனோஜ் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்திருக்கலாம்.
இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம். ஆனால் போலீசார் முழுமையாக விசாரிக்காமல் அரைகுறையாக விசாரித்து சடலத்தை வாங்கி செல்லுமாறு கூறுகிறார்கள் இதை நாங்கள் ஏற்க முடியாது என்றனர். போலீசார் சில மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மாலை சடலத்தை வாங்கி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
