கோவையில் தீபாவளி பர்ச்சேஸ் கூட்டம் போலீசார் தீவிர கண்காணிப்பு…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் கூடும் காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பெரிய கடை வீதி, டவுன் ஹால் மற்றும் ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 180 போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 10 இடங்களில் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிபரப்பப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முக்கிய இடங்களில் 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் சிரமமின்றி சென்று வரவும், 112 போக்குவரத்து போலீசார் முக்கிய இடங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் புறக்காவல் நிலையங்களில் உள்ள அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல மாநகரின் முக்கிய பகுதிகளில் 59 இருசக்கர மற்றும் 28 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் மூலம் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முக்கிய சந்திப்புகள் மற்றும் 11 சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டும், 22 முக்கிய இடங்களில் கூடுதலாக வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் பழைய குற்றவாளிகளை கண்காணித்து பிடிக்கவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும், 7 சரக உதவி கமிஷனர்கள் மற்றும் 20 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசாரின் நடை ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதையும், மக்கள் கூட்டத்தின் அடர்த்தியையும் பயன்படுத்தி நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் 44 ஆண் மற்றும் பெண் குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் நோக்கில் கோவை மாநகர் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *