கோவை அரசு மருத்துவ மனையில் ஆதார் அவசியம்…

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (எச்எம்ஐஎஸ்) என்ற மருத்துவமனை மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள், உள்நோயாளிகள், தாய்சேய் நலம் மற்றும் ஆய்வக முடிவுகள் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம். இத்திட்டத்தின் 2.0 செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், விரைவில் 3.0 திட்டம் துவங்கப்பட இருக்கிறது.

இதற்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் புறநோயாளிகள் சீட்டு வழங்கும் கவுன்டரில் ஆதார் எண் கேட்டு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் ஆதார் கார்டு கொண்டுவராத நிலையில் அவர்கள் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

“அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த போது புறநோயாளிகள் பிரிவு சென்று சீட்டு வாங்கி வர கூறினர். அங்கு சென்ற போது எனது விவரங்களை மட்டுமின்றி ஆதார் கார்டு கேட்டனர். என்னிடம் ஆதார் கார்டு இல்லாத நிலையில், மொபைலில் இருந்த ஆதார் கார்டை காண்பித்தேன். அதில் இருந்த எண் வைத்து எனக்கு புறநோயாளிகள் பிரிவு சீட் அளித்தனர். திடீரென ஆதார் கார்டு கேட்டதால் பதற்றம் அடைந்தேன்.

இதனால், சிகிச்சை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. நான் சிகிச்சை பெற செல்வதற்குள் ஒ.பி நேரம் முடிந்து விட்டதாக கூறினர். இதனால் சிகிச்சை பெற முடியாமல் போனது” என்றார்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் எச்எம்ஐஎஸ் திட்டத்தின் 1.0 கடந்த 2014-ல் துவங்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெயர், பாலினம், வயது ஆகியவை பதிவு செய்யப்பட்டு புறநோயாளிகள் பிரிவுக்கான சீட்டு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து திட்டத்தின் 2.0 கொண்டுவரப்பட்டு, நோயாளியின் பெயர், வயது, பாலினம் மற்றும் மொபைல் எண் ஆகியவை பதிவு செய்யப்பட்டது. இந்த 2.0 திட்டம் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், வரும் 15-ம் தேதி முதல் 3.0 என்ற திட்டத்தை துவங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டத்திற்காக மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளிடம் இருந்து ஆதார் அல்லது ஸ்மார்ட் ரேஷன்

கார்டு எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் பெயர், வயது கேட்டு பெறப்பட்டு வருகிறது. இப்படி பெறப்படும் நோயாளிகளுக்கு சுகாதார அடையாள அட்டை அளிக்கப்பட உள்ளது. இந்த அட்டையை ஒரு முறை பதிவு செய்து பெற்றவர்கள் நாட்டின் எந்த அரசு மருத்துவமனைக்கு சென்றாலும் அவர்களின் முந்தைய மருத்துவ வரலாறு மற்றும் நோய் தன்மை குறித்த தகவலை டாக்டர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இதற்காக தான் புறநோயாளிகள் சீட்டுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனையை பொறுத்தவரை சுகாதார அடையாள அட்டை பெறவும். ஒன்றிய அரசின் அபா கணக்கில் சுகாதார எண் பெறவும் தனி கவுன்டர் அமைத்து இருக்கிறோம். இந்த கவுன்டர் மூலமாக நோயாளிகளுக்கான சேவையை வழங்கி வருகிறோம்.

ஆதார் இல்லாத நபர்களுக்கு 2.0 திட்டத்தில் புறநோயாளிகள் சீட்டு வழங்கி வருகிறோம். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண் அளித்தால் சுகாதார அடையாள அட்டை பெற முடியும். நோயாளிகளுக்கு வழங்க தற்போது ஒரு லட்சம் அட்டைகள் தயார்நிலையில் உள்ளது.

தவிர, மொபைல் எண் இல்லாதவர்கள், முதியவர்கள் ஆகியோருக்கு வசதியாக கைரேகை மூலம் பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியும் உள்ளது. ஆதார் ஒடிபி எண் இல்லை என்றால் பயோமெட்ரிக் கருவி மூலம் புறநோயாளி சீட்டு வழங்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பதிவுகள் நடந்து வருகிறது. இந்த டிஜிட்டல் நடைமுறையால் பொதுமக்கள், நோயாளிகள் குழப்பம் அடைய வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *