கோவையில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகை திருட்டு…
கோவை வீரகேரளம் அருகே உள்ள சிறுவாணி ரோடு ஆலமரத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (44). தனியார் நிறுவன ஊழியர் . இவர் மனைவி கடந்த மே 27ம் தேதி, 7 பவுன் தங்க நகைகளை படுக்கையறையில் உள்ள மர பீரோவில் பத்திரமாக வைத்துள்ளார்.
மறுநாள் (28ம் தேதி) ஆனைகட்டியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராஜேஷ், குடும்பத்தினர் உடன் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர், 29ம் தேதி மாலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது, ராஜேஷின் மனைவி படுக்கையறை பீரோவை இறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகை காணாமல் போயிருந்தது. மர்ம நபர்கள் வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே புகுந்து நகைகளை திருடி சென்று இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேஷ் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வீடு புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற கும்பல் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
