Apartment incident: கோவையில் 13 வது மாடியில் இருந்து விழுந்தவர் சாவு…

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சாஜன் குமார் அகர்வால் (65). இவர் கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் உள்ள 17 மாடிகளை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் சொந்தமாக துணி வியாபாரம் செய்து வந்தார்.

இவருடன் இவரது மகன் ராகுல் அகர்வால் மற்றும் குடும்பத்தினரும் அதே குடியிருப்பின் 13-வது மாடியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று சாஜன் குமார் அகர்வால் தனது வீட்டில் உள்ள ஜன்னல் அருகே நாற்காலி ஒன்றின் மீது ஏறி நின்று ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி ஜன்னல் வழியாக வெளியே விழுந்தார். 13-வது மாடியில் இருந்து சாஜன் குமார் அகர்வால் கீழே விழுந்ததை கண்டு, குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்து அலறினர்.

பின்னர் உடனே அங்கிருந்தவர்கள் உயிருக்கு போராடிய அவரை மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சாஜன் குமார் அகர்வால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வெரைட்டி ஹால் ரோடு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சாஜன் குமார் அகர்வாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் நிலவுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

==

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *