கோவையில் காலி இடத்தில் கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது
கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள நஞ்சைகவுண்டன்புதூர் பரமசிவன் கோவில் தெரு பகுதியில் வசிப்பவர் தினேஷ் சாந்த் ஜெய்ஷ்வான்.
இவர் குடும்பத்துடன் கடந்த 25 வருடங்களாக இந்த பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆஷிஷ் ஐஸ்வான் என்கிற ஆயுஸ் (24). இவர்களது சொந்த ஊர் கொல்கத்தா பனாரஸ் ஆகும். ஆஷிஷ் ஐஸ்வான் காந்திபுரத்தில் உள்ள தனது மாமா கடையில் வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீடான இவருடைய பெரியம்மா முனிதேவி உத்தரப்பிரதேசத்தில் பன்னாரஸில் வசித்து வருகிறார்.
இவருக்கு சுமார் 5 சென்ட் காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் ஆஷிஷ் ஐஸ்வான் 5 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தார். இது குறித்து மர்மநபர் கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தபோது அங்கு 5 கஞ்சா செடிகள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக பறிமுதல் செய்த போலீசார் ஆஷிஷ் ஐஸ்வானை கைது செய்தனர். தொடர்ந்து வழக்குபதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
