நெரிசலில் சிக்கி திணறிய கோவை நகரம்
கோவை நகரில் இன்று பெய்த கனமழை காரணமாக உக்கடம், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் வெள்ளம் புகுந்தது.
உக்கடம் புகிய பஸ் ஸ்டாண்ட் கட்டிய பின்னர் அங்கே மழை நீர் வடிகால் செய்யவில்லை. பஸ் ஸ்டாண்ட் முன் வெள்ளம் குளம் போல் தேங்கியது. பஸ் ஸ்டாண்ட் முன் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மழையால் உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலத்திலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது.
சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் முழங்கால் வரை நீர் தேங்கி நின்றது. பஸ் பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வர முடியாமல் தட்டு தடுமாறி சென்றனர். காந்திபுரம், அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மழை நின்று பல மணி நேரமாகியும் வெள்ளம் வடியவில்லை.
மாநகராட்சி நிர்வாகத்தினர் எந்த பகுதியிலும் வெள்ளம் பாய வழிவகை செய்யவில்லை. மழை நீர் மொத்தமாக ரோட்டில் தேங்கும் வகையில் சாக்கடை, வடிகால் அடைப்பு காணப்பட்டது. சப்வே பகுதியில் உள்ள குளம் போல் தேங்கி நீரை மோட்டார் வைத்து அகற்ற வேண்டியிருந்தது. இந்த மோட்டார்களால் அதிக நீரை விரைவாக அனுப்ப முடியவில்லை. ரோடு முழுவதும் ரோட்டில் மழை நீருடன் சாக்கடை நீர் தேங்கியது. ரோடு தெரியாத அளவிற்கு சாக்கடை குளமும் காணப்பட்டது. வாகனங்களில் சென்ற சிலர் வெள்ள நீர் பள்ளம் தெரியாமல் விழுந்து காயமடைந்தனர்.
மாநகர் மற்றும் புறநகரில் பேரிடர் மேலாண்மை குழுவினர் எந்த பணியும் செய்யவில்லை. மின் வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் தங்கள் துறை சார்பில் எந்த பணியும் செய்யவில்லை. மாநகராட்சியால் நகரின் பல இடங்களில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய முடியவில்லை. போலீசார் அனைத்து பகுதியிலும் நெரிசல் காணப்பட்டதால், போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் தவித்தனர். மக்கள், கோவை நகரில் மழை காலத்தில் செல்ல முடியாத நிலையிருக்கிறது. நகரின் கட்டமைப்பு மோசமாக இருப்பதாக புலம்பினர்.
