கோவையில் 5 பேரிடம் 72,000 ரூபாய் பறிமுதல்… தப்பு கணக்கு போட்டதாக தேர்தல் பிரிவில் புகார்..

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மாவட்ட அளவில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 37.46 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 13 கிலோ போதை பொருட்கள் சிக்கியது. நிலையான கண்காணிப்பு படையினர் 18.65 லட்ச ரூபாய் பறக்கும் படையினர் 12.08 லட்ச ரூபாய் மதிப்பிலான தொகையை பறிமுதல் செய்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிக பட்சமாக 9.58 லட்ச ரூபாயும், தொண்டாமுத்தூரில் குறைபட்சமாக 51 ஆயிரம் ரூபாயும் சிக்கியது. 54 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட அளவில் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் கணிசமாக நடக்கிறது. கட்சியினர் வசம் இருந்து இதுவரை வாக்காளர்கள் தொடர்பான பரிசு பொருட்கள் சிக்கவில்லை.

கிணத்துக்கடவு தொகுதியில், ஜோசி உள்பட 4 நண்பர்கள் சுற்றுலா சென்று விட்டு கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் 4 பேர் மற்றும் டிரைவரிடம் சேர்த்து 72 ஆயிரம் ரூபாய் சிக்கியது. தனித்தனியாக இவர்களிடம் 50 ஆயிரத்திற்கும் குறைவான தொகை இருந்துள்ளது.

ஆனால் தேர்தல் பிரிவினர் மாவட்ட எல்லையான வேலந்தாவளத்தில் வைத்து பிடித்து மொத்தமாக 72 ஆயிரம் ரூபாய் பிடிபட்டதாக கணக்கு காட்டி விட்டனர். ஆனால் 5 பேர் தனித்தனியாக தங்களது பணத்தை தர வேண்டும் என தேர்தல் பிரிவில் புகார் அளித்தனர். கடந்த 2 நாளாக இந்த பணத்தை ஒப்படைக்க தேர்தல் பிரிவினர் தாமதம் செய்வதாக அவர்கள் தெரிவித்தனர் .

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனித்தனி நபர்களிடம் பணத்தை ஒன்றாக சேர்த்து தேர்தல் விதிமுறையில் சேர்ப்பது சரியல்ல. பயணிகள் பஸ்சில் இப்படி சோதனை செய்வார்களா என வாக்காளர்கள் தரப்பில் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *