கோவை மாவட்டத்தில் 501 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்…

கோவையில் 501 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தமிழக முதலமைச்சர் விஜய்யால் நேற்று சென்னையில் துவக்கிவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும் இந்த திட்டம் இன்று நடைமுறைக்கு வந்தது.

கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் அமைச்சர் சம்பத்குமார் கலந்துகொண்டு இந்த திட்டத்தை துவக்கிவைத்தார். பின்னர், மாணவ- மாணவிகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அதனைத்தொடர்ந்து இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் ஜெனி அகல்யா என்னும் மாணவி குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் தங்கப்பதக்கம் வாங்கியதற்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், கணபதி ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி பங்கேற்று, காலை உணவு விரிவாக்க திட்டத்தை துவக்கிவைத்தார். பின்னர், மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி கமிஷனர் மோகனசுந்தரி உள்பட பலர் பங்கேற்றனர். இதுகுறித்து அமைச்சர் சம்பத்குமார் கூறுகையில், “கோவையில் ஏற்கனவே 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 1,107 பள்ளிகளை சார்ந்த 71,028 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர். தற்போது மேலும் 501 பள்ளிகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 56,560 மாணவ-மாணவிகள் கூடுதலாக பயன்பெறுகிறார்கள். மொத்தம் மாவட்டத்தில் 1,608 பள்ளிகளை சேர்ந்த 1,27,578 மாணவ-மாணவியர்கள் பயன்பெறுகிறார்கள்” என்றார்.

One thought on “கோவை மாவட்டத்தில் 501 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *