டபுள் இன்ஜின் அரசு தேவை: கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு…!
கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை , அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி , பாஜக வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் மற்றும் கோவை திருப்பூர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் 23 வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது :
தமிழக மக்களுக்கு நான் தெளிவான செய்தி தருகிறேன். நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும். கோவை உழைப்பாளிகள் நிறைந்த பாசமான மக்கள் நிறைந்த பூமி. இங்கே பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக இருந்து வந்தீர்கள்.
உங்களில் ஒருவனாக இங்கே வந்தபோது நான் உணர்கிறேன்.
2023 ம் ஆண்டில் பெண்கள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பான விவரங்களை எடுத்து வைத்தோம். தனிப்பட்ட முறையில் நான் பல்வேறு கட்சியிடம் ஆதரவு கேட்டேன்.
பெண்களுக்கு இதனால் கிடைக்கப்போகும் முக்கியத்துவம் குறித்து தெரிவித்தேன். நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை.
ஆனால் துரதிஷ்டவசமாக இந்த ஆசை நிறைவேறவில்லை. திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளால் துரதிஷ்டவசமாக இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பெண்களுக்கு அதிக இருக்கைகள் கிடைக்கும் நிலைமை இருந்தது. இதை திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் விரும்பவில்லை.
தமிழகத்தில் பெண்கள் , சின்ன குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை. வரும் 23ம் தேதி நடக்க உள்ள தேர்தலில் பொதுமக்கள் பவர்புல் மெசேஜ் தர வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை
மக்கள் எங்கே பார்த்தாலும் இந்த மசோதா தொடர்பாக கேள்வி கேட்க வேண்டும். பெண்கள் தொடர்பான மசோதாவிற்கு ஏன் ஆதரவு தரவில்லை என மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் 14 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களுக்கு வழங்கி இருக்கிறது.
நெடுஞ்சாலை, விமானம், ரயில்வே என பல்வேறு துறைகளில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி இருக்கிறோம். கடந்த காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட நிதியை விட அதிக நிதியை நாங்கள் வழங்கி இருக்கிறோம்.
தமிழகத்தில் கடன் உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு குடிமகன் மீதும் கடன் தொகை மேலும் மேலும் கூடி வருகிறது.
கோவை மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த சிபி ராதாகிருஷ்ணன் இந்திய துணை ஜனாதிபதி என்ற உயர்ந்த பொறுப்புக்கு வந்திருக்கிறார். எளிய குடும்பத்தில் இருந்தாலும் உயர்ந்த பொறுப்புக்கு வர முடியும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
இதுதான் பாரதிய ஜனதா கட்சிக்கும் இதரக் கட்சிக்கும் உள்ள வித்தியாசம்
டபுள் இன்ஜின் அரசாங்கம் இருந்தால் திட்டங்கள், பணிகள் வேகமாக நடக்கும். மக்கள் நலத்திட்டங்கள் வேகமாக நடக்க தேசிய ஜனநாயக கூட்டணியை நீங்கள் ஆதரிக்க வேண்டும். மேற்கூரை சோலார் மின் திட்டம் மூலமாக அதிக அளவு மின்சாரத்தை சேமிக்க முடியும். சோலார் மின் கூரை மூலமாக ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு 8 ஆயிரம் ரூபாய் சேமிக்க முடியும். சூரிய சக்தியை மக்கள் முழுமையாக பயன்படுத்த முன்வர வேண்டும். ஒன்றிய அரசு இதற்கான மானியம் வழங்கி வருகிறது.
தமிழகத்திற்கு ஒன்றிய அரசு 60 கோடி ரூபாய் மானியம் வழங்கி இருக்கிறது.
சூரிய சக்தி திட்டம் மூலமாக மின் கட்டணம் மக்களுக்கு எளிதாகும். ஒரு ஆண்டிற்கு தமிழகத்தில் 19 கோடி ரூபாய் சேமிக்க முடியும்.
மாநில அரசுக்கு ஒன்றிய அரசு மானியமாக 250 கோடி ரூபாய் சோலார் திட்டத்திற்கு வழங்கி இருக்கிறது.
கோவை மாவட்டம் தொழில்கள் நிறைந்த பகுதி. இங்கே தொழிற்சாலைகள் அதிகமாக இருக்கிறது. அதிக மின்சாரத்தை இங்கே சேமிக்க முடியும்.
டபுள் இன்ஜின் அரசு இருந்தால்தான் நலத்திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடையும். ஏழை நடுத்தர மக்கள் பயன் பெற முடியும். எனவே தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்
2016 ஆம் ஆண்டு முன்பு 12 லட்சம் ரூபாய்க்கு இரண்டு லட்ச ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டி இருந்தது. ஜிஎஸ்டி வந்த பின்பு இது குறைந்துவிட்டது. 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
மருத்துவ சேவைகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலமாக 5 லட்ச ரூபாய் வரை மருத்துவ சேவை பெற முடியும். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூத்த குடிமக்கள் இலவச சிகிச்சை பெற முடிகிறது. முதியோர் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அக்கறையுடன் கவனித்து வருகிறது.
ஒன்றிய அரசின் மருந்தகம் மூலமாக ஆண்டுக்கு பொதுமக்கள் 12,000 ரூபாய் வரை சேமிக்க முடிகிறது.
சிறுநீரக டயாலிசிஸ் இலவசமாக செய்ய முடிகிறது. மக்கள் மருந்தகம் 80 சதவீத விலை தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்கிறது. இதன் மூலமாக மருத்துவ செலவினை ஒவ்வொரு குடும்பமும் சேமிக்க முடிகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வரை சேமிப்பு ஆகிறது.
இன்சூரன்ஸ் திட்டம் மூலமாக இருதய ஸ்டண்ட் மற்றும் மூட்டு சிகிச்சைக்கு பொதுமக்கள் சேவை பெற முடிகிறது. ஏழை எளிய மக்கள் உயர்தர சிகிச்சையை பெறுவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழிவகை செய்துள்ளது .
டபுள் இன்ஜின் அரசு அமைந்தால் தமிழர்களின் வாழ்வு மேம்படும். விவசாயிகள் பொதுமக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
நிலம், மணல் மாபியாக்கள் அகற்றப்படுவார்கள். போதைப்பொருள் தடுப்பு தீவிரமாக மேற்கொள்ளப்படும் இளைஞர்களின் வாழ்வு சிறப்பாக அமைய நாங்கள் உறுதுணையாக இருப்போம். போதைப் பொருள் கலாச்சாரம் முற்றிலும் தடுக்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றி தரப்படும்.
முதல் முறை ஓட்டுப் போடுபவர்கள் மற்றும் பெண்களை சந்தித்து பாரதிய ஜனதா மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஓட்டு கேட்க வேண்டும். பூத் வாரியாக மக்களை சந்தித்து பேச வேண்டும். நாம் என்ன செய்யப் போகிறோம் மக்களுக்கு எப்படி உதவிகரமாக இருக்கப் போகிறோம் என எடுத்து கூற வேண்டும். வரும் 23ம் தேதி நமது கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியை தேடித் தர வேண்டும்.
இவ்வாறு மோடி பேசினார் .
