தரையை தொட்டது சிறுவாணி நீர்மட்டம்… அடுத்த மாதம் 21ம் தேதி வரை மட்டுமே குடிநீர் இருப்பு…
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 15 மீட்டர் அதாவது 49.53 அடி .
இதில் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 8.66 அடி மட்டுமே இருந்தது. நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தினமும் 3.8 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெற அனுமதி இருந்தும் நீர் மட்டம் பாதாளத்தை எட்டியதால் 38 சதவீத குடி நீர் மட்டுமே பெறப்படுகிறது.
தினமும் 3 முதல் 3.5 கோடி லிட்டர் குடிநீர் எடுத்தால் அதிக பட்சமாக அடுத்த மாதம் 21ம் தேதி வரை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்ய முடியும். அதாவது நில மட்டம் வரை குடிநீர் பெற முடியும் அதற்கு கீழ் தரை மட்ட தடுப்பணை அமைந்துள்ளது. இந்த தடுப்பணை பூகோல ரீதியில் கடல் மட்ட உயர கணக்கின் படி, 863.40 மீட்டரில் இருக்கிறது. இந்த அளவில் இருந்து 1.50 மீட்டர் வரை தரை மட்ட பழங்கால தடுப்பணை இருக்கிறது.
இந்த தடுப்பணையில் இருந்து 45 நாட்களுக்கு குடிநீர் பெற வாய்ப்புள்ளது. ஆனால் இதில் குடிநீர் பெற கேரள நீர் பாசனத்துறை தடை விதித்து அங்கே கான்கிரீட் தடுப்பு அமைத்து விட்டது, இந்த தடுப்பு சிறுவாணியின் 4வது வால்வு துவங்கும் இடத்தில் இருந்து தண்ணீர் குகை வழியாக (டணல்) செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கான்கிரீட் கடந்த 2019ம் ஆண்டில் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. வறட்சி காலங்களில் வனப்பகுதி விலங்குகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடும் வறட்சி நிலவி வருவதால் வன விலங்குகளுக்கு குடிநீர் தருவார்களா, கோவை மக்களுக்கு குடிநீரை பகிர்ந்து தருவார்களா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் கடும் வெயில் தாக்கம் காணப்படுகிறது.
வெயில் காரணமாக நீர் ஆவியாதல் கணிசமாக அதிகமாகி விட்டது. மழை பெய்ய வாய்ப்பு இருந்தும் காற்று வீச்சு காரணமாக மழை பெய்யாமல் போய் விட்டதாக தெரிகிறது. தென் மேற்கு பருவ தொடர்பாக வானியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்புகள் பொய்த்து போய் விட்டது. இனியும் வானிலை அறிவிப்புகளை நம்பி காத்திருக்க முடியாது.
கடைசி கட்ட நீர் இருப்பை வினியோகம் செய்ய மேலும் குடிநீர் அளவை குறைக்க குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டுள்ளது. சிறுவாணி குடிநீர் வினியோகம் செய்யப்படும் கோவை மாநகராட்சியின் தெற்கு, மத்திய மண்டல பகுதி, 22 வழியோர கிராமங்களுக்கு மாற்று குடிநீர் குறிப்பாக பேரூர் குடிநீர் திட்டம், ஆழியாறு, பில்லூர் மூலமாக குடிநீர் வழங்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த இணைப்பு குடி நீர் வாய்ப்பு போதுமானதாக இருக்காது என மக்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.
