பானை செய்ய களிமண் தருவாங்களா.. தொழிலாளர்கள் புகார்…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்க நாள் கூட்டம் இன்று நடந்தது .
இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் . இந்த கூட்டத்தில் ஆனைமலை பகுதியை சேர்ந்த மகாலிங்கம் உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் நாங்கள் மண் பானை தொழில் செய்து வருகிறோம். கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குயவன் குட்டையில் களிமண் எடுத்து வருகிறோம் . கடந்த பல ஆண்டுகளாக இந்த தொழில் நாங்கள் செய்கிறோம். இந்த குளத்தில் நாங்கள் களிமண் எடுப்பதற்கு வருவாய்த்துறையினர் முறையாக அனுமதி வழங்குவதில்லை. ஆண்டுக்கு ஒரு லோடு என்ற வகையில் அனுமதி தருகிறார்கள்.
அதுவும் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. நாங்கள் இந்த களிமண் இருந்தால் தான் மண் விளக்கு , பானை , உருவ பொம்மைகள், அடுப்பு போன்ற பொருட்களை தயார் செய்ய முடியும் . எனவே வருவாய் துறையினர் முறையாக அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனர் .
கிணத்துக்கடவு பகுதி எஸ்டிபிஐ அமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. இதில் கோவை மாவட்டத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் . தெரு நாய்கள் கடிப்பதால் பொதுமக்கள் பெண்கள் சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் நாய் தொல்லையால் அதிக பாதிப்பு இருக்கிறது.
நாய்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் தொற்றுநோய் பாதிப்பு உள்ள நாய்களை முறையாக பிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
