நீட் தேர்வு ரத்து செய்ய போராட்டம்…
மத்திய அரசை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்ய கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் அமைப்பினர் இன்று கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முன்னதாக 40க்கும் மேற்பட்டவர்கள் ரயில் நிலைய சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி கோஷம் எழுப்பினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போலீசாரின் அராஜகத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசு இந்த அடக்கு முறையை கைவிட வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும்”. என்றனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் 4 பெண்கள் உட்பட 40 பேரை கைது செய்தனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் செய்து வாகனத்தில் ஏற மறுத்ததால், போலீசார் அவர்களை தர தரவென இழுத்து குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
