பிளேக் நோயில் கோவையை காவு வாங்கிய எலிகள் …
குறுநில மன்னர்களையும், மங்காத வளங்களையும் கண்ட கோவை, பேரழிவையும், பெரும் துன்பத்தையும் சந்தித்துள்ளது.
கடந்த 1900ம் ஆண்டில் கோவையின் மக்கள் தொகை 40 ஆயிரம் ஆக இருந்தது. அப்போது கோவையில் 10 பெரிய கிணறுகள் இருந்தன. அந்த கால கட்டத்தில் சிறுவாணி, பில்லூர் குடிநீர் திட்டம் கிடையாது. கோவையை சுற்றி அதிகளவு குளங்கள் இருந்தன. தண்ணீர் தடையின்றி கிடைத்தாலும் கிணற்று நீரை தான் மக்கள் பிரதான குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.
குடிப்பது, துவைப்பது, ஆடு மாடுகளை குளிப்பாட்டுவது போன்றவற்றிக்கு கிணற்று நீரை பயன்படுத்தி வந்தனர். கோவையின் முக்கிய பகுதியாக டவுன்ஹால், காட்டூர், பேரூர் இருந்தது.
கடந்த 1903ம் ஆண்டில் ஒரு மழை காலத்தில் இனம் தெரியாத நோய் ஒன்று தாக்கியது. நோய் தாக்கிய சில மணி நேரத்தில் உயிர் பிரிந்தது. கடுமையான காய்ச்சல், மூச்சு திணறலில் மனிதர்கள் கொத்து கொத்தாக இறந்தனர். மனிதர்கள் மட்டுமல்ல எலிகளும் கூட்டமாக இறந்தன. திடீர் மரணங்கள் மக்களிடையே பெரும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் நோய் பாதிப்பு, இறப்பிற்கான காரணங்களை கண்டறிய முயற்சி செய்தனர்.
ஒரு வீட்டில் எலி செத்து விழுந்தால், அந்த குடும்பமே ஊரை விட்டு ஓடி விடும். எலி, மனிதர்களின் சாவுக்கு என்ன காரணம் என கண்டறிய முடியாத நிலை இருந்தது. 1903ம் ஆண்டில் இருந்து 1910ம் ஆண்டு வரை கோவையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. 7 ஆண்டுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்தது.
கோவையில் வசதியாக வாழ்ந்தவர்கள் சொத்துக்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வெளியூர் சென்றார்கள். அங்கேயும் நோய் பரவினால் வேறு ஊருக்கு இடம் பெயர்ந்தனர். பலர் மாட்டு வண்டி பயணத்திலேயே வாழ்க்கை நடத்தினர். கோவை சாவு நகரமாக மாறியது. ஈரோட்டில் ரோஸ் இன்ஸ்டியூட் செயல்பட்டு வந்தது. இதில் பிரிட்டனை சேர்ந்த தண்ணீர், கொசு ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வந்தனர். அவர்கள் கோவையில் உள்ள கிணறு, குளங்களில் உள்ள நீர், கொசுக்களை ஆராய்ச்சி செய்தனர்.
அப்போது தான் உயிர்பலி வாங்கியது பிளேக் என்ற கொள்ளை நோய் என்பது தெரியவந்தது. பிளேக் நோய் கொசு மூலமாக பரவவில்லை, காற்று மூலமாக பரவியது எனவும் பின்னர் கண்டறியப்பட்டது.
பிளேக் நோயை கட்டுப்படுத்த நகர சபை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. நகர சபையில் ‘எலி இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். எலி பிடிக்கவும் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு, தினமும் 100 எலி பிடிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது. எலி பொறியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த எண்ணிக்கையை காட்டிலும் கூடுதலாக எலி பிடித்தால் பாராட்டும், பரிசும் தரப்பட்டது.
அதிக எலி பிடித்த வீரர்களை பொதுகூட்டத்திலும் கவுரவித்தனர். பிளேக் நோய் பரவியதற்கு பூமார்க்கெட் பகுதியில் இருந்த தெப்பக்குளமும், புலியகுளமும் முக்கிய காரணமாக கூறப்பட்டது. சுமார் 500 ஏக்கரில் அமைந்திருந்த இந்த இரு குளங்களை ஒரு மாதத்திற்கு மண்ணையும், கல்லையும் கொட்டி மூடி விட்டனர்.
தெப்பக்குளத்தின் மையத்தில் பெரிய கல் ஒன்று இருந்தது. பல நூறு டன் மண் கொட்டியும் இந்த கல்லை மூட முடியவில்லை. இந்த கல் குளத்தின் நீண்ட கால அடையாளமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த கல்லும் காணாமல் போய் விட்டது.
ஆனால் இன்றும் தெப்பக்குளம், புலியகுளத்தின் பெயர் அழியாமல் நிலைத்து காணப்படுகிறது. கடந்த 1930 ஆண்டில் பிளேக் நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. ஆனால் பிளேக் பீதி குறையவில்லை. பிளேக்கில் இருந்து காப்பாற்ற கோவையில் முதல் முறையாக ராஜ வீதியில் பிளேக் மாரியம்மன் கோயில் அமைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ராமநாதபுரம், சிங்காநல்லூர், செல்வபுரம் உட்பட நகரின் பல்வேறு பகுதியில் 20க்கும் மேற்பட்ட பிளேக் மாரியம்மன் கோயில் உருவானது. வேப்பிலை, மஞ்சள் கொட்டி வேண்டினால் குணமாகும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
