கோவையில் வருவாய் துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டம்..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம், நில அளவையாளர் ஒன்றிணைப்பு குழு, வருவாய் கிராம உதவியாளர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களை சார்ந்தவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறியதாவது;
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் “சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை” உடனடியாக இயற்ற வேண்டும்.

நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும். 2003ம் ஆண்டு முதல் செலுத்திய பங்களிப்பை வட்டியுடன் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு கொண்டு சென்று மீள வழங்கிட வேண்டும்.

கிராம உதவியாளர்கள் முழுமையான பயன்களை பெறுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.

அரசுப் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தின் வறிய சூழல் மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5% என குறைக்கப்பட்டுள்ளதை இரத்து செய்து, ஏற்கனவே இருந்ததைப் போன்று 25% ஆக நிர்ணயம் செய்திட வேண்டும்.

பணியில் மரணமடையும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடம் வழங்கிட வேண்டும்.

அனைத்து நிலைகளிலும்,வெளி முகமை, ஒப்பந்த, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும். அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.

பொது மக்களுக்கான பணியை சிறப்பாக மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.

வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கடி ஏற்படுத்துவது தொடர்பாகவும், குறிப்பாக களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு,மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் முற்றாக கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *