900 பவுன் தங்க நகையை அபகரிப்பு: டாக்டர் மீது வழக்கு
கோவை கணபதி மாநகர் எஸ்.ஆர்.வி நகரை சேர்ந்தவர் சண்முகபாண்டியன் (67). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் .
இவரது இளைய மகள் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தை சார்ந்த முருகேசன் என்பவரது மகன், டாக்டராக பணிபுரிந்து வந்த விக்னேஷ் என்பவருக்கு சண்முகபாண்டியன் தனது இரண்டாவது மகளை கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார்.
திருமணம் முடிந்தவுடன் முருகேசன், தனது மனைவி வாசுகி, மகள் ஜீவிதா ஆகிய 3 பேருடன் காளப்பட்டியில் உள்ள சண்முகபாண்டியனுக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் பரப்பளவிலான பங்களாவிற்கு குடிவந்துள்ளனர்.
இதற்கிடையே, சண்முகபாண்டியன் தனது மாப்பிள்ளை விக்னேசுக்கு கோவையில் அரசுப் பணி வாங்கி கொடுத்துள்ளார். விக்னேஷ் அந்த அரசு பணியை ராஜினாமா செய்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி சண்முகபாண்டியன் தனது மாப்பிள்ளை விக்னேசிடம் வீட்டில் உள்ள தங்க நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி லாக்கர் மற்றும் பீரோ சாவியை ஒப்படைத்துள்ளார்.
அப்போது விக்னேஷ் லாக்கர் மற்றும் பீரோ திறந்து அதில் இருந்த 1000 பவுன் தங்க நகைகளை சரிபார்த்து உறுதி செய்து சாவியை பெற்றுக்கொண்டார். இந்தநிலையில், விக்னேஷ் குடும்பத்தினர் தங்கி இருந்த காளப்பட்டி பங்களாவை சண்முகபாண்டியன் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.15 கோடிக்கு விற்றுள்ளார்.
அதன்பின், விக்னேஷ் தனது மனைவியிடம் தொழில் தொடங்க பணம் வேண்டும் என்றும், வீட்டை தனது பெயருக்கு மாற்றி தரும்படியும் கேட்டு வந்துள்ளார். இதனால் சண்முகபாண்டியன் மகளுக்கும், விக்னேசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதன் காரணமாக, விக்னேஷ் அவரது மனைவியை விட்டு பிரிந்து தனது சித்ரா பகுதி அருகே வேறு வீட்டிற்கு குடியேறிவிட்டார். இதைத்தொடர்ந்து, சண்முகபாண்டியன் தனது வீட்டில் உள்ள தங்க நகை லாக்கர் மற்றும் பீரோ சாவியை தரும்படி விக்னேசிடம் கேட்டுள்ளார். ஆனால், விக்னேஷ் அதனை தராமல் இருந்து வந்தார். இதனால், சண்முகபாண்டியன் லாக்கரை உடைத்து திறந்தார். அதில், இருந்த 1000 பவுன் தங்க நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சண்முகபாண்டியன் இதுகுறித்து விக்னேசிடம் கேட்டார். அப்போது, 1000 பவுன் தங்க நகைகளில், 100 பவுன் தங்க நகைகளை மட்டும் திருப்பி கொடுத்தார்.
அதன்பின், வெகு நாட்களாகியும் மீதமுள்ள தங்க நகைகளை விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தரவில்லை. சண்முகபாண்டியன் மீண்டும் சென்று நகைகளை கேட்டபோது விக்னேசின் தாயார் வாசுகி மற்றும் அவரது சகோதரி ஜீவிதா, நகைகளை தரமறுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து சண்முகபாண்டியன் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் 900 பவுன் தங்க நகைகளை திருடி திருப்பி தராமல் கொலை மிரட்டல் விடுத்த விக்னேஷ் (36) மற்றும் அவரது தாயார் வாசுகி (58) மற்றும் சகோதரி ஜீவிதா (38) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
