கோவையில் டன் கணக்கில் யூரியா கடத்தி பதுக்கல்: விவசாயிகள் முற்றுகை…!
விவசாயிகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியா உரத்தை டன் கணக்கில் கடத்தி, ரகசியக் குடோனில் திரவமாக (Liquid) மாற்றி கேரளாவுக்குக் கடத்த முயன்றதாக புகார் வந்தது.
மதுக்கரை வழுக்குபாறை தமனா தோட்டம் மற்றும் ரொட்டி கவுண்டன் புதூரில் சோதனை நடந்தது. இதில் வழுக்குபாறையில் சுமார் 90 டன் எடையில் 20 ஆயிரம் மூட்டைகளில் யூரியா இருந்தது. மேலும் திரவமாக மாற்றப்பட்ட யூரியா கம்பெனியில் வைக்கப்பட்டிருந்தது.
ரொட்டி கவுண்டனூரில் 240 மூட்டைகளில் யூரியா மூட்டைகள் தோட்டத்து கம்பெனியி பதுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அந்த பகுதி விவசாயிகள் குவிந்து லாரியை சிறை பிடித்தனர். முன்னதாக லாரி ஏரியாவிற்குள் அடிக்கடி வந்து சென்றதால் விவசாயிகள் நோட்டம் விட்டு கண்காணித்துள்ளனர்.
உரம் என தெரிந்த பின்னர் விவசாயிகள் அதிரடியாக களம் இறங்கி லாரி மற்றும் யூரியா பேக்டரியை சுற்றி வளைத்தனர். இந்த 2 பேக்டரியிலும் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டாக இங்கே பேக்டரி செயல்பட்டு வருகிறது.
மின் வாரியத்தில் என்ன ஏது என தெரியாமல் உரிய விதிகளின் படி மின் இணைப்பு கொடுத்திருக்கிறார்கள். வேளாண்மை இணை இயக்குநர் தமிழ் செல்வி சம்பவ இடத்திற்கு சென்று சாம்பிள் டெஸ்ட் எடுத்துள்ளார். விவசாயி செந்தில் குமார் கூறுகையில், “ஒரு விவசாயிக்கு மானிய விலையில் அதிகபட்சம் 5 மூட்டை தான் கிடைக்கும். இப்படி டன் கணக்கில் கோவையில் எந்த அதிகாரி உரம் கொடுத்தார் என தெரியவில்லை,
இதில் பல லட்ச ரூபாய் மோசடி, ஊழல் நடந்துள்ளது. விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு வரவேண்டிய யூரியா கேரள மாநிலத்தில் தொழிற்சாலைகளுக்கு கடத்தப்படுகிறது. இதன் உரிமையாளர் ஆசிப் என சொல்கிறார்கள் போலீசார் முறையாக விசாரிக்க வேண்டும், என்றார்.
மதுக்கரை போலீசார் விசாரித்த போது டெனிக்கல் யூரியா என பெயர் போட்ட இவே பில் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எர்ணாகுளம் பெரும்பாவூர் எச் எஸ்ஆர் டிரேடர்ஸ் என்ற பெயரில் பில் போடப்பட்டிருந்தது. கிலோ 24 ரூபாய் என விலை போட்டு 18 ஆயிரம் கிலோவிற்கு பில் தயார் செய்யபட்டிருந்தது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த மோசடியின் பின்னணியில் உள்ள அதிகாரிகள் யார் யார் என விசாரணை நடக்கிறது. உர மோசடி விவகாரம் மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
