கோவையில் முதியோர்களுக்கு டார்ச்சர்: 2 காப்பக வார்டன் மீது நடவடிக்கை…
கோவை மாவட்டத்தில் 319 மகளிர் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளது.
இந்த விடுதிகளில் பெண்கள் பாதுகாப்பு, தரமான உணவு, அடிப்படை வசதிகள் உள்ளதா என சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அடிக்கடி கண்காணிப்பு பணி நடத்தப்படுகிறது.
தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள் உரிய நேரத்திற்குள் விடுதிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தகவல் தெரிவிக்காமல் மகளிர் விடுதியை விட்டு வெளியே செல்லக்கூடாது. பாதுகாப்பு குறைபாடு ஏதாவது இருந்தால் சமூக நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் 3 தங்கும் விடுதிகளில் இன்னும் உரிமம் பெறாமல் செயல்படுவதாக தெரியவந்துள்ளது. அந்த விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கி விரைவில் உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 65 முதியோர் காப்பகங்கள் இருக்கிறது. இந்த காப்பகங்களில் 1006 முதியோர்கள் தங்கி உள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறதா எனவும் சமூக நலத்துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
காப்பகங்களில் தங்கியுள்ள முதியோர்களை காப்பக நிர்வாகிகள் சிலர் மிரட்டுவதாக, தரக்குறைவாக பேசுவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக கிடைத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு காப்பக வார்டன்கள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. காப்பகங்கள் முறையான விதிமுறைப்படி செயல்பட வேண்டும்.
முதியோர்களை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சமூக நலத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
