தமிழக குடிநீர் வாரியத்தில் பல கோடி ரூபாய் திட்டப்பணி ஒதுக்கீட்டில் முறைகேடு புகார்…!
தமிழக மேற்கு மண்டல மாவட்டங்களில் குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது.
இந்த மாவட்டங்களுக்கான குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டாக போலியான நிதி மூலதனம் ( பைனான்சியல் டர்ன் ஓவர்), பணி அனுபவ கால சான்றுகளை சமர்ப்பித்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளை செய்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள் நலவாரிய சங்கம் இது தொடர்பாக பகிரங்கமான குற்றச்சாட்டுகளை தெரிவித்திருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு ஒப்பந்த நிறுவனங்கள் மோசடியாக பெற்ற ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
மண்டல அளவில் 1343 கோடி ரூபாய் அளவிற்கு குடிநீர் பராமரிப்பு மற்றும் விநியோக ஒப்பந்த பணிகள் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டது. அதில் தகுதியற்ற ஒப்பந்த நிறுவனங்களுக்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சிலரின் உதவியால் போலியான சான்றுகளைப் பெற்று அதிகமான திட்டப் பணிகள் செய்ததாக கணக்கு காட்டி பெரிய குடிநீர் விநியோகத் திட்டங்களை தொடர்ந்து செய்து வருவதாகவும் இந்த சங்கத்தின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினருக்கும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து மோசடி புகார் அளித்த சங்க நிர்வாகிகள் கூறியதாவது ;
ஒப்பந்த நிறுவனங்களுக்கு முறைப்படி டெண்டர் விட்டு பணிகளை ஒப்படைக்க வேண்டும். ஆனால் சில அதிகாரிகள் போலியான சான்றுகளை தங்களுக்கு சாதகமாக உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு உருவாக்கித் தந்து அதனை வைத்து அந்த ஒப்பந்த நிறுவனங்கள் தகுதியானவை என சான்று வழங்கி அவர்களுக்கு பணி வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள்.
தகுதியும் உரிய கட்டமைப்புகளும் வைத்துள்ள ஒப்பந்த நிறுவனங்கள் தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. பணிகளை செய்து வரும் ஒப்பந்த நிறுவனங்களின் நிஜமான டர்ன் ஓவர் விவரங்கள் மற்றும் போலியாக உருவாக்கப்பட்ட சான்று விவரங்கள் அடிப்படையில் நாங்கள் புகார் தெரிவித்து இருக்கிறோம். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
கோவை மாவட்டத்தில் சிறுவாணி பில்லூர் பவானி ஆழியாறு உள்ளிட்ட 10 குடிநீர் திட்டங்களின் பராமரிப்பு மற்றும் விநியோக பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே ஒரு ஒப்பந்தம் நிறுவனம் மட்டுமே செய்து வருவதாக தெரியவந்துள்ளது. அதே நிறுவனம் எந்த போட்டியும் இல்லாமல் இந்த முறையும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை எடுத்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன் அவசர கதியில் இந்த ஒப்பந்த நிறுவனம் பணி உத்தரவு பெற்று இருப்பதாக தெரிகிறது. இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக அதிகாரிகள் பலர் செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
